ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை சீராகப் பராமரிக்க மறந்த பணிக்குழுவின் அலட்சியத்தால், பயணிகளுக்கு மூக்கு, காதில் ரத்தம் வந்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பயணிகளுக்கு காது கேட்கும் திறன் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இன்று காலை மும்பையில் இருந்து ஜெய்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக  விமானம் புறப்பட்டது. அந்த விமானம் உயரப் பறக்கப் பறக்க பயணிகள் உள்பட 166 பேர் அசவுகரியத்தை உணர்ந்தனர். சிலர் கடும் தலைவலிக்கு ஆளாகினர்.

ஒரு கட்டத்தில் பயணிகளில் 30 பேருக்கு மூக்கு மற்றும் காதில் இருந்து ரத்தம் வந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகின. இருக்கைகளுக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் மாஸ்குகள் பயணிகளின் பயன்பாட்டுக்காக இறங்கின. என்ன நடக்கிறது என அனைவரும் புரியாமல் அச்சத்தில் உறைந்த நிலையில், தரையிறங்கப் போகிறோம் என்ற அறிவிப்பை மட்டுமே விமானப் பணிக்குழு தெரிவித்ததாகவும், ஆனால், எங்கு? ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை தங்களை பதற்ற நிலையிலேயே வைத்திருந்ததாகவும் பயணிகள் விமானப் பணிக்குழுவைக் குற்றம்சாட்டியுள்ளனர்.பின்னர், விமானம் உடனடியாக மும்பைக்குத் திருப்பப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், மூக்கு மற்றும் காதில் ரத்தம் வந்தவர்களில் 5 பேர் அருகிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

விசாரணையில் புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தில் காற்றழுத்தத்தை சீராக பராமரிக்க அழுத்த வேண்டிய பொத்தானை விமான பணிக்குழுவினர் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது- இதன் காரணமாகவே விமானம் உயரத்தில் செல்ல செல்ல காற்றழுத்தம் சீராக இல்லாத நிலை ஏற்பட்டு, பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவின் பேரில், விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. உடனடியாக விமானப் பணிக்குழுவினர்  தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. 

உடல்நிலை பாதிக்கப்படாத பயணிகள் வேறு விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே  விமானத்துக்குள்  காற்றழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கான பிலீட் (Bleed) சுவிட்சை இயக்க மறந்த பணிக்குழு நாளை, விமானத்தை தரையில் இறக்குவதற்கு பதில் கடலில் இறக்கிவிட்டு, மறந்துவிட்டோம் எனவும் கூற வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிக்குழுவின் அலட்சியத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தரையிலிருந்து விமானமானது படிப்படியாக உயர்ந்து செல்லும் போது விமானத்துக்குள் ஆக்சிஜன் குறைந்து ஒரு வித காற்றழுத்தம் ஏற்படும். இதை சீராக வைத்திருக்க கேபின் ஏர் பிரஸ்ஸர் மெயின்டனென்ஸ் பிளீட் சுவிட்ச்-ஐ இயக்கினால், விமானத்துக்குள் இருக்கும் மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான சீரான காற்று கிடைக்கும்.

அந்த சுவிட்சை இயக்கத் தவறும்போதோ, விமானத்தில் ஜன்னல், கதவு உள்ளிட்ட ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதளவு துளை இருந்தாலோ விமானப் பயணிகளுக்கு ஹைபோக்ஸியா எனும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு தலைவலி, காதுவலி, மூக்கு மற்றும் காதில் ரத்தம் வருதல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் மிக ஆபத்தான நிலை கூட ஏற்படும் என விமானப் போக்குவரத்துத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.