எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து சுறுசுறுப்பாக மாற 5 வழிகள்

நம்மைச்சுற்றி ஒரு கணம் அவதானித்தால், நமது கண்ணில் படுபவை முக்கால்வாசி எதிர்மறையான செயல்களே.

எதிர்மறையான மனிதர்கள் எதிர்மறையான கருத்துக்கள் போன்ற பல விடயங்களின் தாக்கத்தினால் நம்மில் குடியிருக்கும் தன்னம்பிக்கையும், "முடியும்" என்கின்ற மனநிலையும் மிகவிரைவாக காணாமல்போய்விடுகின்றது.

கீழே நாம் பார்க்கப்போகும் யுக்திகளை நீங்கள் பின்பற்றும்போது இவ்வாறான எதிர்மறையான விடயங்களின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்.


1. முடிவை நீங்களே மேற்கொள்ளவேண்டும்.

என்னதான் வெளியில் பல்வேறு எதிர்மறை மனிதர்கள் இருந்தாலும் உங்களால் எதுவும் முடியாது என அவர்கள் கூறினாலும், அவர்களின் கருத்துக்களை கேட்கவேண்டுமா? வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்யவேண்டும். ஒருவரின் கருத்துக்களை புறக்கணிக்க முடிவெடுத்துவிட்டால் அவர் என்ன கூறினாலும் அதை காதில் வாங்காமல் உங்கள் வேலையைப் பார்க்க முடியும்.


2. உங்களிடம் ஒரு வெற்றியாளனைப்போல பேசுங்கள்.
உங்கள் மனதின் குமுறல்களை செவிமடுக்காதீர்கள், அதற்குப் பதிலாக ஒரு வெற்றியாளனைப்போல உங்கள் மனதிடம் பேச ஆரம்பியுங்கள். எங்கெல்லாம் மனம் முடியாதுஎன்று கூறுகின்றதோ, "ஏன் முடியாது என்னால் முடியும்" என்ற பாணியில் மனதிற்குப் பதிலளியுங்கள்


3. உங்கள் சக்தியை உறுஞ்சிக்கொள்பவர்களிடம் கண்டிப்பாக இருங்கள்.

இவ்வாறு உங்களிற்கு நடந்துள்ளதா? ஒரு வேலையை செய்து வெற்றிபெற முடியும் என்ற முழு நம்பிக்கை உங்களிடம் இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக உங்களை நீங்கள் உணர்ந்துகொண்டிருப்பீர்கள். அந்த நேரம் ஒருவர் வருவார் உங்கள் திட்டத்தை அவரிடம் கூறுவீர்கள், அவரும் தொடர்ந்து பேசுவார். அவர் பேசிவிட்டுச் சென்றதும் ஏதோ வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதாக உணர்வீர்கள். உங்களால் எதுவும் முடியாது என்று உணர்வீர்கள். உங்கள் திட்டம் வேலைக்காகாது எனத்தோன்றும். மனஉளைச்சல் அதிகரிக்கும்.

இவ்வாறான மனிதர்களே உங்கள் சக்தியை உறுஞ்சும் அட்டைகள். இவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளுங்கள். முடிந்தவரை உங்கள் முயற்சிகளைப்பற்றி அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.


4. வாழ்வில் பலமான நோக்கத்தைக் கொண்டிருங்கள்.
உங்கள் நோக்கம் பலமாக இருக்கும்போது யாராலும் உங்களது நம்பிக்கையை உடைக்க முடியாது. உங்களினுள் இருக்கும் சக்தியைக் குறைக்கமுடியாது. உங்கள் முயற்சியில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது மற்றவர் கூறும் சிறிய எதிர்மறைக் கருத்துக் கூட உங்களை முழுமையாக முடக்கிவிடும்.


5. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.



உங்கள் முயற்சியில் நீங்கள் 100 தடவையும் தோற்கலாம். அதில் எந்தத் தவறும் கிடையாது. தோல்வியிலிருந்து முடிந்தவரை பாடம் கற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். தோல்வியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களே உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரும். அவ் வெற்றியே நிரந்தரமானது என்பதை உணருங்கள்.




இந்த பதிவு பிரையோசனமாக இருக்குமானால், இதனை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்