ஏமன் போரால் 52 லட்சம் குழந்தைகள் பட்டினியால் பாதிப்பு - ஐ நா அமைப்புஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக 'சேவ் த சில்ரன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.


2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வரும் மோதலால் ஏமன் பெரிதும் சீர்குலைந்துள்ளது. அக்காலகட்டத்தில் இந்த பகுதியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் கடும் மோதல் ஏற்பட்ட சூழலில், ஏமன் அதிபர் அபடுருபூ மன்சோர் ஹாதி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேரிட்டது.


ஈரானின் பிரதிநிதியாக கருதப்பட்ட ஒரு குழுவின் திடீர் வளர்ச்சியால் எச்சரிக்கையான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் 7 அரபு நாடுகள் ஏமன் அரசை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.


ஏமனில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களில் ஏறக்குறைய 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.


ஏமனில் நடைபெற்று வரும் மோதல்களால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை மற்றும் ஏமன் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றால் பல குடும்பங்கள் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.


போர் தொடங்கிய காலத்தைவிட தற்போதைய காலகட்டத்தில் உணவு பொருட்களின் விலை 68 சதவீதம் கூடுதலாக உள்ளது.


தற்போது மொத்தம் 52 லட்சம் குழந்தைகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


இதற்கிடையே ஏமனின் முக்கிய துறைமுக நகரமான ஹூடேடாவில் மோதல் நடந்து வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ள இந்த நகருக்கு உணவுப் பொருட்கள் வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.