எம்.ஜி.ஆர் ஒரு பொக்கிஷம்; சபாநாயகர் கரு புகழாரம்
மீனவர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாமெனவும் உருக்கம்

இலங்கை - -இந்திய மீனவர்கள் தொடர்பாக ஏற்படுகின்ற பிரச்சினை அரச மட்டத்தில் நாங்கள் தீர்த்துக் கொள்ளலாம். கடலோர பாதுகாப்பை பலப்படுத்தி சிக்கல்களை தவிர்க்க முடியும். ஆனால், மீனவர்களும் வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இவைகளில் அரசியலை புகுத்தக்கூடாது. ஆகவே இந்த மீனவ பிரச்சினையை மனிதநேய அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி, பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ கலை அரங்கில் நேற்று முன்தினம் (16) மாலை இடம் பெற்ற புரட்சித்தலைவர் காலம் சென்ற எம்.ஜி.ராமச்சந்திரனின் 101 ஆவது வருட ஜனன தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- ,

இலங்கையில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆரை பாராட்டுவது எங்களது கடமை . நாங்கள் மிக அன்பாக போற்றுகின்ற எம்.ஜி.ஆரை ஒரு பொக்கிஷமாக நாங்கள் தமிழகத்திற்கு கொடுத்திருக்கின்றோம்.

நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவரை பிரித்து பார்க்க விரும்பவில்லை. எங்களில் ஒருவராகவே எம்.ஜி.ஆரை பார்க்கின்றோம்.

அதேபோன்று எங்களுடைய தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடைய இலங்கை விஜயமானது வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு சிறப்பு நிகழ்வாக நான் அறிவிக்கின்றேன்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக எங்களது உறவுப்பாலத்தில் பல்வேறு மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டிருந்தன.

ஆனால் இப்போது நினைத்து பார்க்கின்றேன். அன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று நாங்கள் இருக்கின்ற வாய்ப்பை விட மிக சந்தோஷமாக இருந்திருக்கலாம்.

இலங்கை அரசு என்ற ரீதியிலும், உயர்மட்ட ரீதியான ஒரு குழுவினராக நாங்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழகத்துடைய எல்லா தலைவர்களையும் பார்த்து எங்களுடைய நல்லெண்ண முயற்சிகளை வலுவடைய செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்வுகள் களையப்படுவதுடன் அடுத்த சந்ததிக்கு நிம்மதியான ஒரு வாழ்வை கையளிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கைக்கு தென்னிந்தியா உரிமையாக்கித் தந்த நடை முறைகள் ஏராளமாக உள்ளன. பௌத்த சிங்களவர்களும் இந்துக்களும் ஒரே கடவுளை வழிபடுகின்றோம். இந்துக்களின் கோவிலுக்கு பௌத்தர்கள் செல்கின்றனர். இந்தியாவிற்கு சுற்றுலாவும், யாத்திரையும் செல்கின்றோம். அதே போல் இந்தியாவிலிருந்து ஏராளமானவர்கள் சுற்றுலாவுக்கும் யாத்திரைக்குமாக இலங்கைக்கு வருகின்றனர். கடந்த வருடத்தில் இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 70 ஆயிரம் சுற்றுலாத்துறையினர் இலங்கைக்கு வருகை தந்தனர். இவ்வருடம் ஜூன் மாதம் வரை மட்டும் அதனை விடக்கூடிய தொகையான 3 இலட்சத்து 88 ஆயிரம் பேரையும் தாண்டியுள்ளது. இப்படி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அனேக தொடர்புகள் இருந்து வருகின்றன.

எம்.ஏ.அமீனுல்லா, கம்பளை தினகரன், அக்குறணை குறூப், ஹற்றன் சுழற்சி நிருபர்கள்