சூக்கியை பதவி விலகக்கோரும் ஐ.நா மனித உரிமை தலைவர்ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான கடந்த ஆண்டு இராணுவ நடவடிக்கை தொடர்பில் மியன்மார் நடைமுறை தலைவி ஆங் சான் சூக்கி பதவி விலக வேண்டும் என்று பதவியில் இருந்து விடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார்.

நோபல் விருது வென்ற சூக்கி இராணுவத்தை நியாயப்படுத்துவதை விட மீண்டும் வீட்டுக் காவலுக்கு செல்வது மேல் என்ற பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராத் அல் ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார். இந்த இனப்படுகொலைக்காக மியன்மார் இராணுவத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவின் புதிய அறிக்கை ஒன்று வலியுறுத்தியுள்ளது. இந்த வன்முறைகளை தவிர்க்க தவறியதாக ஐ.நா அறிக்கையில் சூக்கி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கை ஒருபக்கச் சார்பானது என்று மியன்மார் நிராகரித்துள்ளது.

“அவர் இருக்கும் பதவியில் ஏதாவது செய்ய முடியும்” என்று குறிப்பிட்ட ராத் அல் ஹுஸைன், “அவர் அமைதியாக இருப்பதை விட பதவி விலகுவது மேலானது” என்று சூக்கி பற்றி குறிப்பிட்டார்.