சம்பள கோரிக்கையை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று (4) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (04) காலை முதல் வடமாகாண ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சாலை பணியாளர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக 'அடிப்படை சம்பளத்தினை 27,500 ரூபாவாக உயர்த்து' , 'மேலதிக சம்பளமான 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் சேர்' , '03/2006 சுற்று நிறுபத்தின் படி சம்பளத்தை அதிகரி', 'கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு' , 'ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு' , 'சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல் அடையாள பதிவினை இரத்துச்செய்' ,'உயர்ந்த போக்குவரத்து தண்டத்தை இரத்துச் செய்', சீரான போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு புதிய பஸ்களையும் சாரதி காப்பாளர்களையும் தந்துதவு உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் தூர இடங்களில் இருந்தும், கிராம பகுதிகளில் இருந்தும் மன்னார் நகருக்கு வந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டனர்.மேலும் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் பாதீப்படைந்திருந்தனர்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்துகள் உரிய சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)
நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பு முஸ்தீபு

இதேவேளை, தென் மாகாண இ.போ.ச. பஸ் சேவை ஊழியர்கள் கடந்த நான்கு தினங்களாக, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் (03) இலங்கை போக்குவரத்து சபை தலைவர், ரமால் சிறிவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், அவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு போக்குவரத்து அமைச்சருடன் கொழும்பில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், ஏனைய மாகாணங்களிலுள்ள இ.போ.ச. ஊழியர்களையும் இணைத்து, தங்களது பணிப்புறக்கணிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளதாக, இ.போ.ச. ஊழியர் சங்கத்தின் எல்பிட்டிய கிளையின் தலைவர் அநுர மெண்டிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது