எஞ்சலோ மெத்தியுசின் மனவேதனை - அணியிலிருந்து விலகவும் தயார் என்கிறார்இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தன்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி த சில்வாவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி படுதோல்வியடைந்த முழுப்பொறுப்பும் தன் மீது சுமத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், தோல்வியின் ஒரு பங்காளியாக தான் இருப்பினும், அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுமார் 5 வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றிய தான் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவி விலகியதாகவும், தான் தலைவராக இருந்த காலப்பகுதியில் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருந்த காலத்தில் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமைய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணித்தலைவராக மீண்டும் பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும் அணியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணிக்கு தான் தகுதியற்றவர் என்றால் அணியில் இருந்து விலகவும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


தனது மனச்சாட்சியின் அடிப்படையில் தனது ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கடிதத்தின் இறுதியில் அண்மையில் தென் ஆபிரிக்கா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.