கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு கொண்டுசெல்லப்படும்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம் – அருவாக்காடு பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள கழிவகற்றும் பிரிவிற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொண்டுசெல்லப்படவுள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக விசேட வாகனங்களைப் பயன்படுத்தி, கொழும்பிலுள்ள குப்பைகளை நாளொன்றுக்கு 600 தொன் வீதம் அருவாக்காடு பகுதிக்கு கொண்டுசெல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புத்தளம் – அருவாக்காடு பகுதிக்கு கொண்டுசெல்லப்படும் கழிவுகளைப் பதப்படுத்தும் நடவடிக்கை 2 வருடங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டார்.

அதன்பின்னர், நாளொன்றுக்கு 1,200 தொன் கழிவுகளை விசேட ரயில்கள் மூலம் கொண்டுசெல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.