அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை


உலக வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி உடன்படிக்கையை கைவிடுவது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமனெய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதை அடுத்து அதனை பாதுகாக்கும் ஐரோப்பிய நாடுகளின் திறன் பற்றி அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி மற்றும் அவரது அமைச்சரவையை கடந்த புதனன்று சந்தித்திருக்கும் உயர்மட்டத் தலைவர், “அணுசக்தி உடன்படிக்கை அல்லது பொருளாதார விவகாரம் தொடர்பில் (ஐரோப்பா மீது) நம்பிக்கை வைத்திருப்பதை கைவிட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

“அணுசக்தி உடன்படிக்கை இலக்கற்றது என்ற முடிவுக்கு நாம் வந்தால் அது எமது தேசிய நலனை பாதுகாக்காது, நாம் அதனை கைவிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஒரு புதிய உடன்படிக்கை பற்றி “ஒழுக்கமற்ற மற்றும் மோதல்போக்கு கொண்ட” அமெரிக்க அதிகாரிகளுடன் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்று அலி கமனெய் குறிப்பிட்டார்.





ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியேறியபோதும், உடன்படிக்கையில் நீடிப்பதற்கு ஈரானுக்கு பொருளாதார நலன்களை தொடர்ந்து வழங்குவதாக அந்த உடன்படிக்கையில் தொடர்ந்து நீடிக்கும் ஐரோப்பிய வல்லரசுகள் உறுதி அளித்தன.

அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகள் மீண்டும் அமுலுக்கு வர ஆரம்பித்ததை அடுத்து ஈரான் பல பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையிலேயே கமனெய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தடையால் பல ஐரோப்பிய நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட தயக்கம் காட்ட ஆரம்பித்திருப்பதோடு ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடை வரும் நவம்பர் ஆரம்பத்தில் அமுலுக்கு வரவுள்ளது.