பிலிப்பைன்ஸை சூறையாடிய மங்குட் சூறாவளி தென் சீனாவை தாக்கியது




2.5 மில்லியன் மக்கள் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸில் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய சக்திவாய்ந்த மங்குட் சூறாவளி தற்போது தென் சீனாவை தாக்கி வருகிறது. இந்த சூறாவளி பிராந்தியத்தில் கடந்த பல தசாப்தங்களில் வீசும் அதிதீவிர சூறாவளி என கருப்படுகிறது.

இந்த சூறாவளி காரணமான சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குவாங்டொங் மற்றும் ஹைனான் தீவில் இருந்து சூறாவளி காரணமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளி ஹொங்கொங்கில் கட்டடங்களை சேதமாக்கி இருப்பதோடு அந்த நகரம் முடங்கியுள்ளது.

மங்குட் சூறாவளி தற்போது சீனாவுக்குள் ஊடுருவி இருப்பதோடு சீனாவின் குயிசு, சொங்குயிங் மற்றும் யுனான் பிராந்தியங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 சுரங்கப் பணியாளர்கள் உயிரிழந்திருப்பதோடு குறைந்தது 29 பேர் காணாமல்போயிருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பென்குவேட் மாகாணத்தின் இடோகோன் சுரங்கப்பாதை தளத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இங்கு தேடுதல் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு 100ஐ தாண்டும் என அச்சம் வெளியாகியுள்ளது.





கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சூறாவளி ஹொங்கொங்கை கடுமையாக தாக்கியது. கடும் காற்றுக் காரணமாக குடியிருப்பு அடுக்குமாடிகள் அசைவதும் வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு கம்பிகள் முறிந்து விழுவதும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

நகரின் மிக உயர்ந்த கட்டடம் ஒன்றில் குடியிருக்கும் ஒருவர் சூறாவளியில் கட்டடம் ஆடுவதை உணர்ந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பிரதான வீதிகள் மூடப்பட்டு, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த சூறாவளி காரணமாக ஹொங்கொங்கில் 200 பேர் வரை காயமடைந்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து நாட்டுக்குள் வீசும் மங்குட் இன்று செவ்வாய்க்கிழமை ஆகும்போது வலுவிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மங்குட் சூறாவளி ஜியங்மான் நகருக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன கடற்கரையை அடைந்தது. இதன்போது மணிக்கு 110 மைல்களுக்கு அதிக வேகத்தில் காற்று வீசியதோடு சில இடங்களில் நீர்மட்டம் 12 அடி வரை உயர்ந்துள்ளது.

உச்சகட்ட அபாய எச்சரிக்கை விடுத்திருக்கும் நிர்வாகம் மக்களை காற்றில் பறந்துவரும் பொருட்களை தவிர்த்து உட்புறங்களில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் தொடர்ந்து வீசி வரும் அதிவேக காற்று மற்றும் கனமழையின் காரணமாக அங்குள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட மாங்குட் சூறாவளியால் ஏற்பட்ட உயிர் பலிகள் மற்றும் பொருளாதார சேதங்களை அந்நாடு கணக்கிட்டு வருகிறது. இதுவரை 64 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.