எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்


பலஸ்தீன மக்களின் உரிமைக்காக
சர்வதேசம் குரல்கொடுக்க வேண்டும்
நாட்டைப் புதிய கோணத்தில் நோக்குங்கள்

இலங்கையின் பிரச்சினையைச் சுயாதீனமாகத் தீர்த்துக்கொள்வதற்கும் ஒரு சுயாதீன நாட்டுக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கும் இடமளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மீது மதிப்பைக் கொண்டிருக்கும் அனைத்து உலக நாடுகளும் நாட்டைப் புதிய எண்ணத்துடனும் கண்ணோட்டத்துடனும் நோக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை அமர்வு நேற்று முன்தினம் (25) அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமானது. இதில் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தினார். இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 1.30 இற்கு ஜனாதிபதியின் உரை இடம்பெற்றது. அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாத்தவாறு ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் பரந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், ஒரு சுயாதீன நாடென்ற வகையில் எந்த ஒரு வெளிநாட்டுத் தலையீட்டையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.

"இலங்கையர் என்ற வகையில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம் என்பதுடன், அதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் வறுமையுடன் வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

"நாட்டில் தற்போது நான் வகிக்கும் பதவிக்காக வழங்கப்பட்டிருந்த எல்லையற்ற அதிகாரங்களை, அதாவது ஒரு

பேரரசனுக்குள்ள அதிகாரங்களைக் குறைத்து அவற்றை பாராளுமன்றத்திற்குக் கையளிக்க நடவடிக்கை எடுத்தேன். கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டில் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றரை வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இல்லாமல், முன்னேற்றமடைந்த மனிதநேயமிக்க ஒரு பரிபூரண சமூகத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எமது நாடு வெளிநாட்டுக் கொள்கையில் நடுநிலையான போக்கையே பின்பற்றி வருகிறது. அதன்படி உலகின் அனைத்து நாடுகளையும் இனங்களையும் நேச நாடுகளாகவும் நேச இனங்களாகவும் கருதியே நாம் எமது தொடர்புகளைப் பேணி வருகின்றோம். அந்த வகையில் இலங்கையாகிய எமக்கு உலகில் எந்தவோர் எதிரியும் இல்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையும், உலக பலசாலிகளும் தற்போது பின்பற்றும் கொள்கையில் அதைவிடப் புரிந்துணர்வுடன் கூடிய பரந்துபட்ட நோக்குடன் செயற்பட வேண்டும். வறுமையொழிப்பு தொடர்பில் உலக மக்களுக்காக இப்போது முன்னெடுப்பதைவிட மிகப் பரந்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வானிலை, காலநிலை மாற்றங்கள், வருமானம் ஈட்டுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், அரச செயற்பாடுகளில் சாதாரண மக்கள் மீது கவனம் செலுத்துவதில் காணப்படுகின்ற குறைபாடுகளுமே வறுமையில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. இதனையும் கவனம் செலுத்தி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.