பகிடிவதைக்கு கடுமையான தண்டனை; விரைவில் சட்டம்


பகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
பொலன்னறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று (07) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி:
பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப் பேற்கவுள் ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
உலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை. பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுவது பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைய காரணமாகிறது.
தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டும்.
தேசிய உற்பத்தி செயற்பாட்டிற்கு தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில்துறைகளுக்கு தேவையான தொழில் தகைமைகளைக் கொண்ட திறமையான இளைஞர், யுவதிகளையும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ப பயிற்றப்பட்ட தொழிற்படையை யும் உருவாக்குவதே இன்றுள் அவசர தேவை.
நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பொலன்னறுவையின் புதிய தொழிற்பயற்சி நிலையம் பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய வீதியில் தொரதெக பிரதேசத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படுகிறது.
இதற்கென 6,500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நெதர்லாந்து அரசே இதற்கு தேவையான கடன் உதவியை வழங்குகின்றது.
கட்டுமான பணிகள், மோட்டார் தொழில்நுட்பம், மின் இயந்திரவியல், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளின் கீழ் ஐந்து பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 34 முழு நேர தொழில்நுட்ப கற்கை நெறிகள் இங்கு நடாத்தப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட நிர்மாணப் பணிகளை மூன்று ஆண்டுகளில் நிறைவுசெய்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கற்கை நெறிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டதுடன், திறன் விருத்தி தகவல்கள் உள்ளடங்கிய இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.