குழந்தைகளை கொல்ல இணையத்தில் தேடியதால் சிக்கிய தாய்அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததற்காக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.

இவர் கொலை செய்வது எப்படி என்பது பற்றி இணையதளத்தில் தேடலில் ஈடுபட்டதாலேயே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

ஸ்டபனி லாபொன்டைன் என்ற அந்தப் பெண் தனது 13 மாத பெண் குழந்தை மூச்சு விடவில்லை என்று அவசர சேவைக்கு கடந்த 2017 நவம்பரில் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் இந்த அழைப்புக்கு முன்னதாக அவர் இணையதளத்தில் “மூச்சுத்திணற வைக்க வழிகள்”, “ஆதாரமின்றி கொலை செய்வது” மற்றும் “சிறப்பாக கொலை செய்வது எப்படி” என்ற கேள்விகளில் தேடுதலில் ஈடுபட்டிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த குழந்தை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிர்பிழைக்கவில்லை.

2015 செப்டெம்பர் மாதத்திலும் இந்த பெண்ணின் 4 மாத குழந்தை ஒன்று இதேபோன்று மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் 25 வயதான அந்தப் பெண் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.