வெள்ளத்தில் தீவாக மாறிய அமெரிக்க நகர்அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிவரும் புளோரன்ஸ் சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால், கடற்கரை நகரமான வில்மிங்டன் வட கரோலினா மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள அனைத்து வீதிகளும் அணுக முடியாதவையாக ஆகியுள்ளன.

எனவே வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நகரில் இருந்து தள்ளியே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

1.2 இலட்சம் மக்கள் தொகை உடைய இந்த நகரம் மாநிலத்துக்குள்ளேயே ஒரு தீவு போல இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளியால் ‘ஆபத்து அதிகரித்து வருகிறது’ என்றும் முன்பை விட இப்போதுதான் இந்த சூறாவளி ஆபத்தானதாக மாறியுள்ளது என்றும் வடக்கு கரோலினா மாநில ஆளுநர் ரோய் கூப்பர் கூறியுள்ளார்.

புளோரன்ஸ் புயலினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டுமென்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு கரோலினாவில் 10 பேர் மற்றும் தென் கரோலினாவில் 5 பேர் என புளோரன்ஸ் புயல் பாதிப்பின் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.