நடிகர் பட்டாளத்தின் அரசியல் பிரவேசம்ரஜினிகாந்த் அடுத்த மாதம் அரசியல் கட்சியைத் தொடங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இடைத்தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் வரவுள்ளன.

இதில் ரஜினி போட்டியிட்டு மக்கள் செல்வாக்கை அறிய வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் செப்டம்பர் 9 அல்லது 12-ஆம் திகதி கட்சிக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் கோவை அல்லது மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க கமல், விஷால், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகியோர் கட்சியைத் தொடங்கி விட்ட நிலையில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் எப்போது கட்சியைத் தொடங்குவர் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது ரசிகர்கள் உள்ளனர்.

அரசியல் கட்சி தொடங்குவது என்றால் மக்கள் பணியாற்றி விட்டு பல்வேறு போராட்டங்களுக்காக சிறைக்குச் செல்வது , தனக்கென தொண்டர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிறகு கட்சியை ஆரம்பிப்பது ஆகும். தேர்தல் பிரசாரத்தின் போது 'இதைச் செய்தேன், அதைச் செய்தேன்' என பட்டியலிடுவதற்கு வசதியாக நலத் திட்டம், தண்ணீர்ப் பந்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போது நிலைமை அப்படியில்லை. தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருந்து விட்டால் போதும். உடனே கட்சியை தொடங்கி விடுகின்றனர் நடிகர்கள். இதில் சிலர் இயக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்து விட்டும் அரசியலுக்கு வருகின்றனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் கடந்த பெப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். இவர் ஒரு செயலியையும் உருவாக்கி அதன் மூலம் மக்கள் தரும் புகாரை தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார். ரஜினிகாந்தோ அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் கட்சியை தொடங்குவார் என்று தெரிகிறது.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால், திடீரென்று ஒரு இயக்கத்தை உருவாக்கி விட்டார். 99 சதவீதம் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அப்படியே பிரதி செய்து தொடங்கி விட்டார். பாஸ் என்கிற பாஸ்கரனும் அரசியல் கட்சியை தொடங்குகிறார்.

விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இவர்களில் விஜய், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். சிம்பு இன்னும் எந்த இயக்கத்தையும் தொடங்கவில்லை. ஆனால் அவரது தந்தை டி.ராஜேந்தரோ "என் மகன் அரசியலுக்கு வருகிறேன் என்றால் அவர் பின்னால் தமிழகமே நிற்கும்" என்று கூறியுள்ளார்.

அதுபோல் விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ், சித்தார்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவ்வபோது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எனவே இவர்களும் அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். ஆனால் சினிமாவில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இவர்கள் அரசியலிலும் சாதிப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். போகிற போக்கைப் பார்த்தால் 'வீதிக்கு ஒரு கட்சி, வீட்டுக்கு ஒரு கொடி' என்ற நிலைமை ஆகிவிடும் போலத் தெரிகிறது.