வீதியில் பாதுகாப்பாக பயணம் செய்வது எவ்வாறு?வீதியில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது எவ்வாறு என்பதற்கு விளக்கங்கள் தருகிறார் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவு தேசிய தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யானி த சொய்ஸா.

வீதி விபத்துகள் குறித்து அவர் எமக்கு விளக்கங்கள் தந்தார்.

கேள்வி: வீதி விபத்துகள் எனக் கூறுவது எவற்றை?

பதில்: ஒரு சம்பவம் இடம்பெறும் போது ஏற்படும் மோதலினால் உயிரிழப்பு, பொருள் இழப்பு ஏற்படவும் கூடும். ஏற்படாமல் இருக்கவும் கூடும். அவ்வாறு எதிர்பாராத வகையில் ஏற்படும் சம்பவத்தால் பௌதிக, பொருளாதார, சமூக மற்றும் சுகாதாரம் போன்ற பல விடயங்களில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

கேள்வி: வீதி விபத்துகள் மூலம் நபரொருவருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்ன?

பதில்: வீதி விபத்துகள் காரணமாக ஒருவர் தனிப்பட்ட ரீதியில் உடலளவிலும் மனத்தளவிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். தொழில் மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு மாத்திரமல்ல சிலர் ஊனமடையவும் நேரிடுகின்றது. உற்பத்தியொன்றில் ஈடுபட்டிருந்தால் அந்த நபரின் உற்பத்தி பாதிப்படைகின்றது. வியாபாரியென்றால் அவரின் பணியும் தொழிலாளர்களும் பாதிப்படைகின்றார்கள். விபத்தினால் அங்கவீனமடைந்தால் அவருடைய குடும்பத்தாரும் பாதிப்படைகின்றார்கள். ஒரு வீதிவிபத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பாதிக்கப்படுகின்றார்கள்.

கேள்வி: வீதிவிபத்தின் மூலம் நபரொருவர் மரணமடையும் சந்தர்ப்பங்கள் எவை?

பதில்: அதிகளவு இரத்தப் பெருக்கு, மூளைக்கு பாதிப்பு ஏற்படல், விபத்து ஏற்பட்டதால் ஏற்படும் அதிர்ச்சி என்பன காரணமாக நபரொருவர் இறக்க நேரிடலாம். விபத்து மூலம் நபரொருவரின் உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் மோசமான பாதிப்பால் மரணம் ஏற்படலாம். ஏதேனும் நோயால் ஏற்கனவே பீடிக்கப்பட்டிருந்தால் விபத்து காரணமாக நோய்ப் பாதிப்பு அதிகரித்து மரணம் நிகழலாம்.

கேள்வி: வீதிவிபத்தால் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

பதில்: விபத்து நிகழ்ந்த பின்னர் மயக்கமுற்ற அல்லது முள்ளந்தண்டு பாதிப்பு ஏற்பட்ட நபரையும் உடம்பை அசைக்காது நேரான ஆதாரத்துடன் சரியான வாகனத்தில் கவனமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அநேகமான வேளைகளில கழுத்துக்கு பாதிப்பு ஏற்படும். அவ்வேளைகளில் கழுத்துக்கு கொலர் ஒன்றையோ அல்லது காட்போர்டையோ (கொலரைப் போன்று) வைத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். விபத்துக்கு உட்பட்டவரை சரியான முறையில் கொண்டுவராவிட்டால் விபத்தின் பாதிப்பு அதிகமாகி மரணமடைய நேரிடலாம். அல்லது வாழ்நாள் பூராவும் கைகால் செயலிழக்கலாம்.

கேள்வி: வாகன விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பதில்: விபத்துகளில் 80 வீதமானவை தனிப்பட்ட காரணங்களாலேயே இடம்பெறுகின்றன. அதாவது அதிக களைப்பு, நோய் நிலைமை, குடிபோதை, பாதையைப் பற்றி சரியாக அறியாதிருத்தல், திடீர் சுகவீனங்கள், திடீர் முடிவெடுத்தல் என்பனவே விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. விசேடமாக பார்வைக் குறைபாடு, தலைவலி, மாரடைப்பு என்பன காரணமாகவும் அதிக விபத்துகள் இடம்பெறுகின்றன.

மேலும் சூழலின் தன்மையையும் (காலநிலை) கருத்தில்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக மழை காலத்தில் வாகனம் வழுக்கிச் செல்லல், வெள்ள காலங்களில் பாதை தெளிவில்லாமல் பள்ளத்தில் விழலாம்.

அதேபோல் நடத்தை குறித்து கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக உறக்கம், களைப்பு, உணர்ச்சிவசப்படல்...வாகன பட்டிகளை அணிதல் வேண்டும். வாகனத்திலுள்ள ஏனையோர் வாகனப் பட்டிகளை அணிந்திருக்கின்றார்களா என கவனிக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதேபோல் பாதையில் செல்லும் வாகனங்கள் சரியான இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும். பாதசாரிகள், பயணிகள் மற்றும் சாரதிகள் வீதி விதிகளை சரியாகப் பின்பற்றினால் விபத்துகளை இலகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

மதாரா முதலிகே