Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சில விடயங்களைப் பேசியே ஆகவேண்டியள்ளது..!
சந்திரிக்காவினால் மு.காங்.தலைவர் அஷ்ரப் ஏமாற்றப்பட்டாரா? அதனால் அஷ்ரப் பாதிக்கப்பட்டாரா?அல்லது சமூகம் பாதிக்கப்பட்டதா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்...!


2000ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாருக்கு மு.காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மக்காவில் வைத்து 52 பக்க கடிதம் ஒன்றை வரைந்து அனுப்பியிருந்தார். அந்தக்கடிதத்தில் சந்திரிக்கா அம்மையார் செய்த சில துரோகங்களையும், ஒருசில நண்மைகளையும் குறிப்பிட்டு தனது ஆதங்ககங்களை வெளிப்படுத்தியிருந்தார். அந்த விடயங்களில் இதுவும் ஒரு விடயமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயமானது... சந்திரிக்கா அஷ்ரப்புக்கு செய்த துரோகமா? அல்லது சமூகத்துக்கு நடந்த அநியாயமா? என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறியது யார்? என்ற கேள்விக்கும் பதில் தேடவேண்டியுள்ளது.
இப்படித் தொடங்குகிறது உரையாடல்.. நான் நீங்கள் ஆட்சியமைப்பதற்கு சம்மதக்கடிதம் தறாது விட்டால் எப்படி மேடம் நீங்கள் ஆட்சியமைத்திருக்க முடியும்.?
ஜனாதிபதி பதவிக்கு தாங்கள் எவ்விதம் உயர்த்தப்பட்டீர்கள் என்கின்ற உண்மையை நீங்களும் இன்னும் சிலரும் மறந்திருக்கலாம். ஆனால், தங்களைப்போன்றவர்களுக்குள்ள சிறந்த ஞாபகசக்தி இதனை மறக்கவிடாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேடம்..
வரலாற்றுப் பதிவாக கொள்ளவேண்டியதோர் சம்பவத்தை மிகுந்த அடக்கத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
S.L.M.C யின் தலைவரால் தங்கள் அரசுக்கான ஒப்புதல் மடல் அளிக்கப்படவில்லையானால், ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அவர்கள் தங்களை அரசமைக்க ஒருபோதும் அழைத்திருக்க மாட்டார். S.L.M.C யின் தலைவருக்கு முதண்மையும், அமைச்சர்கள் எதுவானால் என்ன? எத்தனை கேட்டால் என்ன? பதவிகள், இன்னோரன்ன ஆட்சி அதிகார உச்சங்களுடன், என்ன விலை கொடுக்கவும் "யு.என்.பி". தயாரான ஒரு வேளையில்தான்...
எவ்வித நிபந்தனையுமின்றி, நாம் அம்மடலை வழங்கினோம் என்கின்ற உண்மையையும் தாங்கள் மறுதளிக்க முடியாது மேடம்...
அக் கடிதத்தை கையளித்த நான் அரசை ஸ்தாபிப்பதற்கு முன்பாக முக்கியமான சில விடயங்களைப் பற்றிப் பேச நேரம் வேண்டினேன். அப்போதைக்கு தருவதாக ஒப்புக்கொண்டாலும், அடுத்து வந்த வேளைகளில் அதைப் பெறுவது முடியாமலே போனது...
எப்படியாயினும் மறுநாள் தங்களைச் சந்தித்துப் பேச நான் முற்பட்ட வேளை.....என்னுடன் பேச முடியாதென்றும், அபபடியே ஏதேனும் ஆலோசனைகள் உங்களிடமிருந்தால், பொ.ஜ. முன்னனியின் ஏனைய தலைவர்களும் இருக்கும்போது பேசலாம் என ஆணவமாகவே சொன்னீர்கள்....


'பரவாயில்லை' எனக்கு அதில் அக்கறையில்லை, என்று நான் சொன்னாலும், எனக்குள் உருவான இன்னுமொரு மனப்புண்தான் அது...இதனையடுத்து தங்கள் தொடர்புகளினின்றும் என்னைத் துண்டித்துக் கொண்டேன்....என்று அந்த உரையாடல் தொடர்கிறது.இது சம்பந்தமாக 2000 ஆகஸ்ட் 28ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் 'அபிமன்யு' சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
1994ம் ஆண்டுத் தேர்தலிலும் இந்த நிலைமைகள் தெளிவாக வெளிப்பட்டிருந்தன. பதினேழு வருடகால ஐ.தே.கட்சி ஆட்சியில் பொதுமக்கள் நன்றாகவே வெறுப்படைந்த போதிலும், சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான பொ.ஐ.முன்னனியினால் இத் தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையை பெற முடியவில்லை. அரசாங்கத்தை அமைப்பதற்கு மு.காங்கிரஸின் ஆதரவு தேவை என்ற நிலையில், அப்போதைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அனுப்பிய ஹெலிக்கொப்டரில் அம்பாரையிலிருந்து கொழும்புக்கு வந்த அஷ்ரப், சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அளித்த ஆதரவினாலேயே பொ.ஐ. முன்னனி அப்போது ஆட்சியை அமைத்துக் கொண்டது.


இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வேளையில், ஐ.தே.கட்சிக்கு அஷ்ரப் ஆதரவு வழங்குவார் என்ற எதிர்பார்ப்பிலேயே அப்போது அவருக்கு ஹெலிக்கொப்டர் அனுப்பி அவசரமாக கொழும்புக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை டி.பி. விஜேதுங்காவும், காமினி திஸாநாயக்காவும் மேற்கொண்டார்கள். அஷ்ரப் இரத்மலானை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவருக்கான இரண்டு கார்கள் காத்திருந்தன. ஒன்று ஜனாதிபதி விஜேதுங்கவின் கார், மற்றது சந்திரிக்கா அனுப்பிய கார் ஆகும்.டி.பி.விஜேதுங்காவின் ஹெலியில் வந்திறங்கிய அஷ்ரப் அவர்கள், சந்திரிக்கா அம்மையார் அவர்கள் அனுப்பி வைத்த காரில்தான் ஏறி அமர்ந்து கொண்டார். அன்றுதான் சந்திரிக்காவின் சரித்திரத்தில் மாற்றமே ஏற்பட்டது. இப்படிப்பட்ட சந்திரிக்காதான், அஷ்ரப்பின் சம்மதக் கடிதத்தைப் பெற்று ஆட்சியை அமைத்ததன் பின், பேச முடியாதென்று அஷ்ரப்பை அலட்சியப் படுத்திய விடயமாகும்.தலைவர் அஷ்ரப் அவர்கள் நினைத்திருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, எதையும் தறுவோம் என்றுகூறிய ஐ.தே.கட்சியுடன் சில தீர்வுகளைப் பெற்றிருக்கலாம். அல்லது சந்திரிக்கா அம்மையாருடன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒப்பந்தம் செய்து சில காரியங்களை சாதித்திருக்கலாம். இப்படியான சந்தர்ப்பங்கள் எல்லா நாளும் கிடைப்பதில்லை என்பதை அறிந்து கொண்டும் ஏன்? இந்த சந்தர்ப்பத்தை அஷ்ரப் பயன்படுத்த வில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும்.எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.