மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளர் வெற்றிநவம்பர் வரை பதவிக்காலத்தை தொடரவுள்ளதாக யமீன் அறிவிப்பு
மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அந்நாட்டின் பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கிய இப்ராஹிம் மொஹமட் சொலி வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று (23) இடம்பெற்ற இத்தேர்தலில், மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சொலி, 134,616 (58.34%) வாக்குகளைப் பெற்று, மாலைதீவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளரான அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் யமீன் 96,132 (41.66%) வாக்குகளை பெற்றார்.


இத்தேர்தலில், 262,135 பேர் வாக்களிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், 233,877 பேர் வாக்களித்திருந்தனர். 3,129 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மாலைதீவு மக்கள் எடுத்துள்ள குறித்த தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவதாக, அந்நாட்டு ஜனாதிபதி யமீன் இன்று (24) மாலைதீவு அரச தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.

தான் மாலைதீவு மக்களுக்கு நேர்மையாகவே கடமையாற்றியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆயினும் மக்கள் தனது சேவை தொடர்பில் நேற்றையதினம் முடிவொன்றை எடுத்துள்ளனர். எனவே நான் அம்முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதோடு, அவர்களுக்கான எனது சேவையை தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரையான தனது, பதவிக் காலத்தை தொடரவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.