பாராளுமன்றத்தை பலமாக்க பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்




'இவால்' சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி
பாராளுமன்றத்தின் வினைத்திறனை வலுப்படுத்த பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதேநேரம், அரசசேவையில் உள்ளவர்களின் வினைத்திறனை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வினைத்திறனானவர்களாக இருப்பது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமான மதிப்பீடு குறித்த சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval) 2018' மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாடுகளில் இருந்து 104 பாராளுமன்ற உறுப்பினர்களும், 155ற்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. இவற்றை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கி அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவது பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்பாக அமைகிறது.

பெரும்பாலான நாடுகளில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் சம்பந்தப்பட்ட தேசிய தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றமை மிகவும் குறைவாகவே உள்ளன.

அபிவிருத்தி மதிப்பீடுகள் பற்றிக் கலந்துரையாடும்போது பாராளுமன்றத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவது பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும்.





ஏனைய நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைகள் எந்தளவு திருப்திகரமாக இருக்கின்றன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எமது நாட்டில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் தொடர்பில் உறுப்பினர்கள் மதிப்பீடுகளை மேற்கொள்வது பிரதானமாகும். பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரில் சபையைக் கூட்டுவதற்கு கூட்ட நடப்பெண் 22 ஆக இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டியுள்ளது.

எமது நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்கள். ஆண்களைவிட பெண்களின் வினைத்திறன் அதிகம் என்ற பொதுவான நிலைப்பாடு உள்ளது. பாராளுமன்றத்தின் வினைத்திறனை அதிகரிக்கவும், அதன் செயற்பாடுகளை மேலும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 60 வீதமாகவிருந்தால் அதன் செயற்பாடு வினைத்திறனாக இருக்கும் என நம்புகின்றேன். பாராளுமன்ற கலாசாரம் உள்ள நாடுகளில் பெரும்பாலானவர்கள் வாக்குகள் மூலமே பாராளுமன்றத்துக்குத் தெரிவாகின்றனர். இலங்கையில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 27 பேர் மாத்திரமே வாக்குகள் இன்றி அரசியல் ரீதியாகத் தெரிவுசெய்யப்படுகின்றனர். இவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்களும், வாக்குகள் மூலம் தெரிவானவர்களும் இணைந்து நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை நோக்கி செயற்படும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருந்தால் வினைத்திறனான பிரதிபலன்களை எதிர்பார்க்க முடியும்.

எமது நாட்டில் அரசாங்க சேவையில் 15 1/2 இலட்சம் பேர் இருக்கின்றனர். எனினும், அரச சேவையின் வினைத்திறன் 30 முதல் 35 வீதமாகவே காணப்படுகிறது. இந்தளவு பாரிய எண்ணிக்கையைக் கொண்ட மனிதவளத்தினால் 30-, 35 வீதமான வினைத்திறனை மாத்திரமே வெளிக்காட்ட முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. அரசசேவையில் உள்ளவர்களின் வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வினைத்திறனானவர்களாக இருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வினைத்திறனை அறிந்துகொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம், அவர்கள் பாராளுமன்றத்துக்கு வரும் நாட்களைக் கொண்டு கூறமுடியும்.

மாதமொன்றில் எட்டு நாட்கள் மாத்திரமே பாராளுமன்றம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் வினைத்திறன் என்பது சபையில் நடைபெறும் வாத விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை. சபை நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக நடைபெறும் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் அமர்வுகளில் பங்குபற்றுவதிலும் தங்கியுள்ளது. எனினும், போதிய உறுப்பினர்களின் வரவு இன்மையால் குழுக் கூட்டங்கள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் வினைத்திறன்கள் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமானதாகும்.

நாட்டின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சேவையாளர்களின் வினைத்திறன் மிகவும் முக்கியமானதாகும். அபிவிருத்திகளை மதிப்பீடுகளை மேற்கொள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையமுடியும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்