எரிபொருள் விலைக் குறைப்பொன்று ஏற்பட வாய்ப்பு…


சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சி கண்டுள்ளது.ஒபெக் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிற்கும், ஈராணுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை கைவிட்ட அமெரிக்கா ஈராணுக்கு எதிரான தடைகளை அமுலுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரங்களில் மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்துவந்தது.

மசகு எண்ணெய் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரான் மீதான தடை என்பது உலக நாடுகளின் எரிபொருள் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இதன் பிரகாரம் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

எனினும் தற்போது ஒபெக் நாடுகளினதும், ஐக்கிய அமெரிக்காவினதும் எண்ணெய் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறுதி விலை நிர்ணயங்களின் பிரகாரம் சர்வதேச மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் சரிவடைந்து, 0.21 டொலர் வீழ்ச்சியையும், ஐக்கிய அமெரிக்க மசகு எண்ணெயின் விலை 3 சதவீதம் சரிவடைந்து, 0.18 டொலர் வீழ்ச்சியையும் கண்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதியில் ஏற்படுத்தப்படவுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகார மாற்றத்தில் குறிப்பிடத்தக்களவான எரிபொருள் விலைக் குறைப்பொன்று ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.