பலஸ்தீனத்திற்கான நிதியில் அமெரிக்கா மேலும் வெட்டுபலஸ்தீனத்திற்கான 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவிகளை நிறுத்தியிருக்கும் அமெரிக்கா மேலும் 10 மில்லியன் நிதி வெட்டை மேற்கொண்டுள்ளது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதியே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தம் பணம் மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு செல்கிறது.

இதன்படி பலஸ்தீனத்திற்கான அமெரிக்காவின் பாதுகாப்புடன் தொடர்பற்ற கிட்டத்தட்ட அனைத்து நிதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா உதவி நிதியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நிறுத்திய அமெரிக்க நிர்வாகம், தொடர்ந்து கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள பலஸ்தீன மருத்துவமனைகளுக்கான நிதியையும் நிறுத்தியது.

அமெரிக்கா ஏற்பாடு செய்திருக்கும் மத்திய கிழக்கு அமைதி திட்டத்திற்கு திரும்புவதற்கு பலஸ்தீனத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த நிதிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய முடிவை அடுத்து பலஸ்தீன தலைமைகள் வெள்ளை மாளிகையுடனான தொடர்பை துண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது