பலஸ்தீனரின் கத்திக்குத்தில் இஸ்ரேலியர் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கடைத்தொகுதி ஒன்றுக்கு வெளியில் இஸ்ரேல்–அமெரிக்கர் ஒருவரை பலஸ்தீனர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய பலஸ்தீனரை கால்நடையாக துரத்திய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றும் தீவிர வலதுசாரியான அரி புல்ட் என்பவரே கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். எனினும் அவர் குறிப்பிட்ட இலக்காக இருக்கவில்லை என்று இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு குழந்தைகளின் தந்தையான 45 வயது புல்ட் அந்த கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றத்தில் வசித்து வந்துள்ளார். இதில் 17 வயது பலில் ஜப்ரிக் என்ற பலஸ்தீனரே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலியர்களுக்கு எதிராக பலஸ்தீனர்கள் கத்திக்குத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதோடு அண்மைக்காலத்தில் அவ்வாறான தாக்குதல் குறைந்து காணப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி ஹெப்ரோனின் யூத குடியேற்றம் ஒன்றுக்கு அருகில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்றுக்கு முயன்றதாக பலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.