வடகொரிய உறவில் சிக்கல்: சீனா மீது குறைகூறும் டிரம்ப்வட கொரியா விவகாரத்தில் அண்மைய சிக்கல்களுக்கும், அமெரிக்க மற்றும் சீன வர்த்தகச் சர்ச்சைகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தாம் நம்புவதாய் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஷி சின்பிங்குடனும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனும், தமக்குச் சிறந்த உறவுகள் இருந்ததாகக் கூறிய டிரம்ப், வொஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம், பியோங்யாங் விவகாரத்தைச் சிக்கலாக்கியிருப்பதாகச் குறிப்பிட்டார். சீனா தான் வட கொரியாவுக்கான வழி என்று அவர் குறிப்பிட்டார்.

வட கொரியாவுக்குள் செல்லும் 93 வீதமான பொருட்கள் சீனா வழியாகவே செல்கின்றன. தற்போதைய நிலைமையை வர்த்தகப் போர் என்று குறிப்பிடத் தமக்கு விருப்பமில்லாவிட்டாலும், வட கொரியாவுடனான அமெரிக்க உறவைச் சீனா கடினமாக்குவதாக டிரம்ப் குறைகூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் வட கொரியப் பயணத்தை ரத்துசெய்த சில நாட்களில் டிரம்பின் கருத்து வெளியாகியுள்ளது. வடகொரிய அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுகளில் திருப்தியான அளவு முன்னேற்றம் இல்லை என்ற காரணத்தால் பொம்பேயோவின் பயணத்தைத் டிரம்ப் ரத்துசெய்தார்.