Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மஹிந்தவின் கருத்தால் கூட்டு எதிரணிக்குள் பேரதிர்ச்சி; ஆவேசம்



ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து வேட்பாளர் தெரிவானால் போர்க்கொடி
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவில் வெளியிட்ட கருத்து அவருக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அதற்கு எதிராகப் போர்கொடி தூக்குவதற்கும் ஒரு பிரிவினர் தயாராகியிருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரர் ஒருவர் போட்டியிடுவார் எனக் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறங்குவது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியைக் கொடுத்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்திய செவ்வி அவர்களை மேலும் எரிச்சலூட்டியிருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மஹிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் வேட்பாளர் தெரிவு இருக்கக் கூடாதென உறுதியாகக் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே குமார வெல்கம இதனைத் தெரிவித்தார்.

"குடும்ப ஆதிக்கம் 2015ஆம் ஆண்டில் அவருடைய பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனது குடும்பத்தையே முன்னாள் ஜனாதிபதி முன்னிலைப் படுத்தினார். இதனால் பல அமைச்சர்கள் கூட அவரை வெறுக்கத் தொடங்கினர். ஆதரவு வழங்கியவர்கள் கூட அவருடைய செயற்பாடுகளால் அதிருப்தியடைந் திருந்தனர். எமது கட்சி எல்லாருக்கும் உரிமையானது. எனவே ஜனாதிபதி வேட்பாளர் பதவியை ஒரு குடும்பம் மாத்திரம் உரிமை கொண்டாட முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப வட்டத்துக்கு அப்பால் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருக்கின்றனர். இவர்களில் ஜனாதிபதி வேட்பாளருக்கு யார் பொருத்தமானவரென தெரிவு செய்யப்பட வேண்டும்.

"ஜே.ஆர்.ஜயவர்த்தன தனக்கு அடுத்த தலைவரான ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்பவில்லை. அதன் பின்னர் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க விரும்பவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது குடும்பத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி முயற்சித்தால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதற்கு எதிராக செயற்படுவதற்கு பின்னிற்கப் போவதில்லையென்றும் குமார வெல்கம கூறியுள்ளார்.

எமது நிர்வாகத்தில் உரிய இடத்தை வழங்காமையால் மைத்திரிபால சிறிசேன எமது அரசாங்கத்தைவிட்டு வெளியேறி எதிராகப் போட்டியிட்டதை நாம் மறுந்துவிடக்கூடாது. மீண்டுமொரு சிறிசேனவை உருவாக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி முயற்சிக்கிறாரா? என்றும் குமார வெல்கம கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புக்களுக்கு தனது புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவையும் அழைத்துச் சென்றிருந்தார். நாமல் ராஜபக்‌ஷவை அடுத்த தலைவராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அவர்களின் இந்திய விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.