அம்பாறை, முல்லைத்தீவு, காலியில் தேசிய சுனாமி ஒத்திகைமுல்லைத்தீவு, காலி, அம்பாறை மாவட்டங்களில் எதிர்வரும் புதன்கிழமை (05) சுனாமி ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன.இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் ஏற்பாட்டில் இலங்கையில் மூன்று மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு சுனாமி ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒத்திகைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப்பணிப்பாளர் சி. லிங்கேஸ்வர குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முன்னாயத்த

கலந்துரையாடலில் முப்படையினர், பொலிஸார், பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரி, வலயக் கல்வி பணிமனை அதிகாரி, கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.அதன்படி எதிர்வரும் புதன்கிழமை (05), முல்லைத்தீவு மாவட்டத்தின் சுனாமி ஒத்திகை பகுதியாக வட்டுவாகல் தொடக்கம் செல்வபுரம், மணல்குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, முல்லைநகர், வண்ணாங்குளம் போன்ற ஆறு கிராம சேவை பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அன்றையதினம் (05) காலை, குறித்த பகுதியைச் சேர்ந்த கரையோர மக்கள் அனைவரும், குறித்த பகுதியிலிருந்து வெளியேறி அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கான சகல ஏற்பாட்டு உதவிகளும் வழங்கும் சுனாமி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் இதனால் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ந. கலைச்செல்வன் - முல்லைத்தீவு)