Breaking

Wednesday, October 3, 2018

உயிரிழப்பு 1,200ஐ தாண்டியது: மீட்பு நடவடிக்கையில் நெருக்கடிஇந்தோனேசிய பூகம்பம், சுனாமி:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக் 844 இல் இருந்து 1,234 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் நிர்வாகம் இன்னும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த அனர்த்தம் ஏற்பட்டு நான்கு நாட்கள் கடந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட சுலாவெசி தீவின் பாலு நகர் மற்றும் ஏனைய பகுதி மக்கள், அரசிடம் இருந்து குறைந்த அளவு உதவியே கிடைத்திருப்பதாக முறையிட்டு வருகின்றனர்.

முதலில் நினைத்ததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என இந்தோனேசிய தேசிய அனர்த்த முகாமை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பூகம்பம்் 6 மீற்றர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளால் தேடி வருகின்றனர். சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த அனர்த்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 200,000 மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில் மீட்பாளர்கள் பாதிக்கப்பட்ட பல பகுதிகளையும் அடையாத நிலையில் அந்த பகுதிகளை எட்டுப்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த அனர்த்தத்தின் முழு அளவை தெரிந்து கொள்ள வாரங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒக்போர்மின் மனிதாபிமான இயக்குனர் நிகல் டிம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார். “இங்கு முழுமையாக நீர் மாத்திரம் நிரம்பி இருக்கவில்லை. அந்த நீர் முழுவதும் குப்பைகள் குவிந்துள்ளன. அங்கு கொன்கிரீட்கள், மரங்கள், கார்கள் என்று பெரும் சிமந்து கலவை போன்று குவிந்து காணப்படுகிறது. இராச்சத புல்டோசர் ஒன்று நிலத்தை அகழ்ந்த பின் முற்றாக சிதறுண்டு கடப்பது போல் காணப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலு சுற்றுப்புறத்தில் சுமார் 1,700 வீடுகள் மூழ்கடிக்கப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கான மக்கள் புதையுண்டிருக்கலாம் என நம்புவதாக தேசிய அனர்த்த முகாமை குறிப்பிட்டுள்ளது.

இங்கு தேவாலய இடிபாடுகளிலிருந்து 34 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனேசிய செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.

தேவாலயத்தில் நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளச் சென்ற 86 மாணவர்களும் மண்சரிவில் சிக்கிக்கொண்டனர். சேற்றில் இறங்கிச் சென்று சிறுவர்களைத் தேடி மீட்பதில் மீட்புப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.

உடல்களை அவசர மருத்துவ வாகனத்துக்குச் சுமந்து செல்ல சேற்றில் அவர்கள் ஒன்றரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டியிருந்ததாகச் சங்கம் கூறியது.

மறுபுறம் பாலு நகரில் இருந்து வடக்காக பூகம்பம் மையம் கொண்ட பகுதிக்கு நெருக்கமாக உள்ள டொங்காலா பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை வெளியாகியுள்ளது. இந்த பிராந்தியத்தில் சுமார் 300,000 மக்கள் வசிப்பதோடு மேலும் இரண்டு மாவட்டங்கள் உள்ளடங்கலாக இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

டொங்காலா மாவட்டத்தின் வெளிப்பகுதியை அடைந்த மீட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. “பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை பயங்கரமாக உள்ளது” என்று செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“பாலு நகரில் பேரழிவு நிகழ்ந்திருக்கிறது. டொங்காலாவில் இருந்து வரும் ஆரம்ப அறிக்கைகளை பார்க்கும்போது அங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தோனேசியாவின் சும்பா தீவுக்கு அப்பால் நேற்றுக் காலை இரண்டு முறை பூகம்பம்் ஏற்பட்டுள்ளது. அந்த இரண்டு பூகம்பங்களும் அடுத்தடுத்துத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

5.9 ரிக்டர் பூகம்பம், 750,000 பேர் வசிக்கும் சும்பா தீவுக்கு 40 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டிருந்தது. சுமார் 15 நிமிடங்கள் கழித்து, அதே வட்டாரத்தை அதை விட வலுவான 6.0 ரிக்டர் பூகம்பம் தாக்கியது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

பொருட்சேதம் குறித்தோ உயிர்ச்சேதம் குறித்தோ உடனடித் தகவல் இல்லை.