15 வயது மாணவியை கடத்திச்சென்று, கர்ப்பிணியாக்கிய முன்னாள் பிக்கு கைது - WeligamaNews

Latest

Friday, October 5, 2018

15 வயது மாணவியை கடத்திச்சென்று, கர்ப்பிணியாக்கிய முன்னாள் பிக்கு கைது


15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய துறவரத்திலிருந்து விலகிய முன்னாள் பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்து கலேவலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கலேவலை - வஹகோட்டே பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியை சந்தேகநபர் சில மாதங்களுக்கு முன்னர் கடத்தி சென்றுள்ளார்.


இந்த நிலையில், மாணவி தனது தாயாரின் தொலைபேசிக்கு அழைப்பொன்றை எடுத்து பேசியுள்ளதுடன் தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தையும் கூறியுள்ளார்.


இதனையடுத்து அங்கிருந்து மாணவி மீட்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் சம்பவம் தொடர்பாக கலேவலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வீட்டில் இருந்த மாணவி காணாமல் போயிருந்தார்.


பெற்றோர் மாணவியை தேடிய போதிலும் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்த நிலையில் தாயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாணவி தான் வாரியபொல பிரதேசத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து தாயும், உறவினர்களும் வாரியபொல பிரதேசத்திற்கு சென்று மாணவியை மீட்டு கலேவலைக்கு வந்துள்ளனர்.


சந்தேகநபரான வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பௌத்த பிக்கு மாணவியை கடத்தி சென்று சுமார் இரண்டு மாதங்கள் வீடொன்றில் தடுத்து வைத்திருந்துள்ளார்.


மீட்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனையில் மாணவி கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.


இளம் வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகநபரை கைது செய்ய வாரியபொல பிரதேசத்திற்கு பொலிஸ் குழுவை அனுப்பியிருப்பதாக கலேவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குறித்து கலேவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்