20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு - இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியம்


நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய சீரற்ற வானிலையினால் 5 ஆயிரத்து 537 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.


இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.


மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், அனர்த்தங்களில் சிக்குண்டு களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.


13 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை, ஆயிரத்து 295 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


183 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 896 பேர், 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான சீரற்ற வானிலையினால் காலி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, காலி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 292 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஆயிரத்து 985 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


களுத்துறை மாவட்டத்தில் மூன்று பேர் மழையுடனான சீரற்ற வானிலையினால் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


புத்தளம் மாவட்டத்தில் 870 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் கொழும்பு, குருநாகல், மட்டக்களப்பு, நுவரெலியா, கண்டி, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, சீரற்ற வானிலையினால் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி, களுத்துறை, பதுளை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, புலத்சிங்ஹல, அகலவத்த, மத்துகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளதாக மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அத்துடன், பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது.


கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், காலி மாவட்டத்தின் நெலுவ, தவலம, எல்பிட்டிய, நியகம, நாகொடை, யக்கல்லமுல்ல மற்றும் பத்தேகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, அரபி கடலில்ல ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை வலுவடைந்து ஓமானை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.