5.5 மில்லியன் அமேரிக்க டொலர் மோசடியை உடனடியாக விசாரிக்கவும்: பைஸர் முஸ்தபா.


( ஐ. ஏ. காதிர் கான் )
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி முயற்சி குறித்த விசாரணையைத்
துரிதப்படுத்துமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை, இந்திய நிறுவனமான சொனி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


இதில் ஒளிபரப்பு உரிமைக்கான தொகை மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுவதே வழக்கமாகும்.


தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு தொகையும், தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு தொகையும், தொடர் முடிவடைந்த பின்னர் மீதித் தொகையும் வழங்கப்படும்.

இதன்பிரகாரம், தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு செலுத்தப்படவிருந்த தொகையை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குக்குப் பதிலாக, தனிப்பட்ட கணக்கொன்றுக்கு மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சி குறித்தே, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த மாதம் ஆரம்பத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த விசாரணையைத் துரிதப்படுத்துமாறு, விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.


இவ்வாறு நிதி மோசடி செய்யப்படவிருந்த தொகை, 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.