தள்ளாடும் பாகிஸ்தானுக்கு சவுதி 600 கோடி நிதியுதவி - 2 வது தடவையாக சவூதி மண்ணில் இம்ரான்கான்
நிதி நெருக்கடியில் தள்ளாட்டம் போடும் பாகிஸ்தான் அரசுக்கு 600 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார்.


பாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றுள்ளார். அவருடன் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. சவுதி மன்னர் சல்மான் மற்றும் அந்நாட்டின் மந்திரிகளை இந்த குழுவினர் சந்தித்துப் பேசினர்.


சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. இதில் 300 கோடி டாலர்கள் ஓராண்டுக்குள் ரொக்கப்பணமாக அளிக்கப்படும்.


மீதி 300 கோடி டாலர்கள் அளவுக்கு சவுதியில் இருந்து கடனுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளலாம். அந்த தொகையை அடுத்த ஆண்டில் செலுத்தலாம். இப்படி, 3 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இருநாட்டு நிதி மந்திரிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.