கசோக்கி கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா புது விளக்கம்
செய்தியாளரின் கொலை ‘பெரும் தவறு’

ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு பின்னால் ‘முரட்டுத்தனமான செயல்’ இருப்பதாக சவூதி அரேபியா புதிதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த செய்தியாளரின் கொலை விவகாரம் சர்வதேச அளவில் கோபத்தை தூண்டியுள்ளது.

பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கும் சவூதி வெளியுறவு அமைச்சர் அப்தல் அல்–ஜுபைர், இந்த செயல் “மிகப்பெரிய தவறு” என்று குறிப்பிட்டதோடு, இந்தக் கொலைக்கு முடிக்குரிய இளவரசர் உத்தரவிட்டதாக கூறப்படுவதை மறுத்தார்.

கசோக்கி கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்குள் நுழையும்போதே கடைசியாக காணப்பட்டார்.

இந்த செய்தியாளர்கள் எங்கே என்பது குறித்து சவூதிக்கு அழுத்தம் அதிகரித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

சவூதி ஆரம்பத்தில் கசோக்கி துணைத் தூதரகத்தில் இருந்து எந்த பிரச்சினையும் இன்றி வெளியேறிதாக கூறி வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக சவூதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறை ஒப்புக் கொண்டது. சண்டை ஒன்றின்போது அவர் கொல்லப்பட்டதாக சவூதி கூறியது. எனினும் இந்தக் கூற்று பரந்த அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சவூதி அரேபியாவை விமர்சித்து வந்த கசோக்கி, தூதரக வளாகத்திற்குள் இருந்த சவூதி முகவர்களால் கொல்லப்பட்டிருப்பதாக துருக்கி அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் துருக்கி கூறி வருகிறது.

இந்நிலையில் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அப்தல் அல்–ஜுபைர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். இதனை ஒரு கொலையாக அவர் வர்ணித்தார்.

“நாம் அனைத்து உண்மைகளையும் கண்டறிவதில் உறுதியாக உள்ளோம். இந்த கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்திற்கு அப்பால் தனி நபர்களே இதனைச் செய்ததாகவும் அவர் வலியுறுத்தினர்.

“உண்மையிலேயே மிகப்பெரிய தவறு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை மூடி மறைக்க முயன்றது மேலும் சிக்கலாக்கியுள்ளது” என்றும் அல்–ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.

கசோக்கியின் உடல் எங்கே என்பது தமக்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலின் பின்னணியில் சவூதியின் மிக பலம்கொண்டவராக உள்ள முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எமது உளவுச் சேவையின் மூத்த தலைவர்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் “ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சவூதி வெளியிட்ட கூற்றில் கைகலப்பில் அவர் இறந்ததாக கூறப்பட்டிருந்தது. முன்னதாக கசோக்கி காணாமல்போன திகதியில் இருந்து அடுத்த 18 நாட்களாக அவர் துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதாகவே சவூதி கூறி வந்தது.

எனினும் இது தொடர்பில் 18 பேரை கைது செய்ததாகவும் முடிக்குரிய இளவரசரின் இரு உதவியாளர்களை பணி நீக்கம் செய்ததாகவும் சவூதி தற்போது கூறுகிறது.

இந்நிலையில் கசோக்கியின் மரணத்திற்காக அவரது மகனிடம் சவூதி மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹமது இருவரும் அனுதாபத்தை வெளியிட்டதாக சவூதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கசோக்கியின் கொலை தொடர்பாக சவூதி அரேபியா அளித்த விளக்கத்தில் ஏமாற்று வித்தை மற்றும் பொய் ஆகியவை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

சவூதியின் கூற்று குறித்து அமெரிக்க அதிகாரிகள் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ விளக்கம் “நம்பகத்தன்மை” வாய்ந்ததாக டிரம்ப் முன்னதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், இது ஒரு “மோசமான சம்பவம்” என்றும் இதற்கு காரணமானவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கொலை குறித்து அனைத்து தகவல்களையும், வெளியிடப்போவதாக துருக்கியின் ஆளுங்கட்சி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக செய்தி முகாமை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதியின் குழுவொன்றே கசோக்கியை கொன்றதாக துருக்கி புலன்விசாரணையாளர்கள் கூறி வரும் நிலையில் சவூதி அரசு மீது நேரடியாக குற்றம்சாட்டுவதை துருக்கி அரசு தவிர்த்து வருகிறது.