கசோகி கொலை ஒரு கொடுங்குற்றம், நீதி வெளிவரும்: சவூதி அரேபிய இளவரசர்


கசோகி கொலை ஒரு கொடுங்குற்றம் என சவூதி அரேபிய இளவரசர் இன்று கூறியுள்ளார்.


பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கொல்லப்பட்டார்.


இதை முதலில் மறுத்து வந்த சவூதி பின்னர் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்தது. அதன்பின்னர் சவூதியிலிருந்து அனுப்பட்ட குழு அவரை கொன்றது என தெரியவந்தது.


இதனை வரலாற்றில் மறைத்த மிக மோசம் நிறைந்த சம்பவம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். இச்சம்பவம் சவூதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவூதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், கசோகி கொலைக்கு பின்னர் இளவரசர் முகமது பின் சல்மான் முதன்முறையாக கூறும்பொழுது, அனைத்து சவூதியினருக்கும் இந்த கொலை அதிக வலியை தருகிறது. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இது வலியை, அதிர்ச்சியை தருவது என கூறியுள்ளார்.


இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவர். துருக்கி அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். முடிவில் நீதி வெளிவரும் என்று கூறியுள்ளார்.