சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திக்குமாறு ஜ.உலமா வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை நீங்குவதற்கு பிரார்த்திக்குமாறு, நாட்டு மக்களை அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோண் விடுத்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பல பாகங்களிலும் இந்நாட்களில் பெய்து வருகின்ற கடும் மழையினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இதனால் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இம்மழை காரணமாக பல இடங்களிலும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்யுமாறு அவ்வப் பிரதேச மக்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் இத்தொடர் மழையின் ஆபத்துக்களிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற கஷ்டங்களிலிருந்தும் பாதுகாக்குமாறும், இன்னல்களில் சிக்கியிருக்கின்ற மக்களுக்கு அருள் புரியுமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது. மேலும் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியமுள்ள இடங்களில் உள்ள மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடக்குமாறும், உலமாக்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு இது போன்ற நிலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வழிகாட்டுவதுடன் துஆக்களை அதிகமாக ஒதிவர ஆர்வமூட்டுமாறும், மக்களை இறைவனின் பக்கம் திருப்பி அவனது உதவிகளை பெற்றுக் கொள்ள வழிகாட்டுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொண்டுள்ளது