Breaking

Friday, October 5, 2018

மதுபாவனைக்குள் இளைஞர்களை வலிந்திழுக்கும் போலி பிரசாரங்கள்


மதுசார எதிர்ப்பு தினம் நேற்று இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.
வருடமொன்றிற்கு மதுசார பாவனையினால் உலகளாவிய ரீதியில் சுமார் 3 மில்லியன் பேர் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் 6% வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் மக்களுக்கு ஏற்படும் நோய்களில் 5.1% வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை வருடமொன்றிற்கு சுமார் 23,000 பேர் மதுபாவனையினால் மரணிக்கின்றனர். 297 மில்லியன் இலங்கை ரூபா மதுசார பாவனைக்காக எமது மக்களால் செலவழிக்கப்படுகின்றது. மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இளவயதிலேயே விதவையாக்கப்பட்டு, பிள்ளைகள் அவதியுறுகின்றனர். செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுவுக்கு செலவழிக்கப்படுகிறது. அதாவது இத்தொகையானது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக் கொடுக்கும் இலாபம். சில கிராமங்களிலும் பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோருக்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2/3 பங்கு மதுவுக்கே செலவிடப்படுகின்றது. ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல. அன்றாடம் உணவிற்கும் வெவ்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூலித் தொழில் செய்பவர்களாகவே உள்ளனர்.

மதுபான நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருடமொன்றிற்கு 60 பில்லியன் ரூபா வரித்தொகையாக கிடைக்கிறது.ஆனால் 212.6 பில்லியன் ரூபா மதுபாவனையினால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த செலவிட வேண்டியுள்ளது. இதனால் அரசாங்கம் வருடா வருடம் நஷ்டத்தையே தழுவுவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

மதுபானம் மூளைத் திறன் விருத்தியை குறைக்கக் கூடியது.அது ஒரு ஊக்கியல்ல என்று மருத்துவம் சொல்கின்றது. மேலும் மதுசாரம் உடலினுள் செல்லும் அளவு அதிகரிப்பிற்கேற்ப ஒரு விதமான உடல் அசௌகரியமும் உடல் சோர்வும் ஏற்படுகின்றது.மதுசாரம் உடலினுள் சென்று விளைவை ஏற்படுத்துவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. அப்படியிருக்கும் போது மதுப் போத்தலைக் கண்டவுடன் அல்லது ஒரு குவளையை குடித்த மறுகணமே அருந்தியவர்களின் செயற்பாடுகள் மாறுவது எப்படி?

அதாவது சில ஊடகங்களின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் மதுபான வகைகள் சந்தோசமான ஒன்றாகவும் மதுசாரம் அருந்தியவுடன் அந்த நபரின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது போன்றும் காட்சிகள் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. இவை சிறிய வயதிலிருந்தே இளைஞர்களின் மனதில் பதிந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மதுசாரக் கம்பனிகளும் இது போன்ற போலியான நம்பிக்கைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.

அத்தோடு சமூகத்தில் காணும் ஒவ்வொரு காட்சியும் இது போன்ற மூட நம்பிக்கைளை சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனதிலும் பதிய வைத்துள்ளன. அதனால் மதுசாரம் அருந்துவோர் அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் உடற் கஷ்டங்கள் நீங்குவதாகவும் பல்வேறு பிரச்சினைகளை மறக்கச் செய்வதாகவும் எண்ணிக் கொண்டுள்ளனர்.

எனவே மதுபானம் தொடர்பாக போலியான மூட நம்பிக்கையில் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

எமது நாட்டின் நிலைமை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தனிமனித மதுசார பாவனையானது ஒப்பீட்டளவில் குறைவாகும்.

மதுசார பாவனையை குறைத்துக் கொள்வதற்கும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கும் மேற்கொள்ளக் கூடிய பயன் தகுந்த வழிமுறைகள் பின்வருமாறு:

பயன் தகு கொள்கைகளை உருவாக்குதல், பழகும் முன் காத்தல், உளவியல் சிகிச்சை முறை, பயன்தகு கொள்கைகளை உருவாக்குதல்.

மது பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப் பயன் கூடியதும் இலகுவானதுமான முறையாகும். மதுப்பாவனையினால் ஏற்படும் இனங்காணக் கூடியத் தாக்கங்களை சிறுவர், இளைஞர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாக தெளிவூட்டல் முக்கியம். அவ்வாறான விளம்பரங்களுக்கு ஏமாறாமலிருப்பதற்குரிய உத்திகளை தெளிவுப்படுத்தி வழிகாட்டுதல் வேண்டும்.

மதுசார பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் தெளிவுப்படுத்தல் வேண்டும்.

மது பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்சை முறை பாவிக்கப்படுகின்றது. உள நல வைத்திய ஆலோசனையின்படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற்கொள்ளலாம்.

மதுசார பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானிக்கவும். இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடவும்.இறுதியில் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கவும்.

மதுபாவனையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் மது பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூறவும் தயாராகுங்கள்.உதாரணமாக நான் மது அருந்துவதை நிறுத்தி விட்டேன் என்னை பலவந்தப்படுத்த வேண்டாம் எனக் கூற வேண்டும்.

நிதர்சனா செல்லத்துரை
(மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்)