மசகு எண்ணெய், டொலர் அதிகரிப்பே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம்




உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்திருப்பதும், டொலர் பலமடைந்திருப்பதுமே இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.


ஈரானுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளை கொண்டுவந்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் சகல உலக நாடுகளும் கவனம் செலுத்தியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். பிரதமர் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்க விலைச்சூத்திரமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்திய பின்னர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றார்.





நவம்பர் மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தால் அங்கிருந்து பெற முடியாமல் போகும் எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குளிர் காலம் என்பதால் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள்களின் பயன்பாடு அதிகமாகவிருக்கும். எனவே நவம்பர் மாதம் என்ன நடக்கும் என்பதை சகல உலக நாடுகளும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.


மறுபக்கத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி பலமடைந்து ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதுவும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாகும்.