வெளிநாட்டில் பணிபுரிவோர் வங்கியூடாக பணம் அனுப்ப பட்ஜட்டில் விசேட திட்டம்


வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

வங்கிகளுக்கூடாக அனுப்பும் பணத்துக்கு மாற்றீடாக அவர்களுக்கு உள்நாட்டில் வீடு அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்கும் வகையில் இவ்விசேட திட்டம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்பட மாட்டாதென்றும் அமைச்சர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "தற்போது வெளிநாடுகளில் வாழும் அநேகமான இலங்கையர்கள் தாய் நாட்டுக்கு வங்கிகளுக்கூடாகவன்றி உண்டியல் முறை மூலமாக நாட்டுக்குப் பணத்தை அனுப்புகின்றனர். இது அரசாங்கத்துக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறான யோசனையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது," என்றும் அமைச்சர் கூறினார்.

" வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தமது பணத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு உண்டியல் முறையையே முதற்தர தெரிவாகக் கொண்டுள்ளனர். இது வங்கிச் செயற்பாடுகளுக்கு அப்பால் இடம்பெறும் பண மாற்றீட்டு முறையாகும். நாணய மாற்று வீதம் அடிப்படையில் வங்கியிலும் பார்க்கச் சற்று அதிகமான தொகை இதன் மூலம் கிடைப்பதன் காரணமாகவே மக்கள் இதனை விரும்புகிறார்கள். உண்டியல் முறையை செயற்படுத்துவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. சம்பளம் கிடைக்கும் தினத்தன்று அவர்களே நேரில் சென்று பணத்தைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்புகிறார்கள். இப்பணம் வங்கிகளுக்கூடாக வராததன் காரணமாக அரசாங்கத்துக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நஷ்டத்திலிருந்து மீள்வதற்காகவே அரசாங்கம் இப்புதிய யோசனையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளது," என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொருவருக்கும் தமக்கென சொந்தமாக ஒரு வீடு அமைப்பதே முதல் கனவாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் அக்கனவை நனவாக்கும் விசேட சலுகைகள் வங்கிகளுக்கூடாக அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன. இதன்படி வெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு கிடைக்கும் அதேநேரம் வங்கிகளுக்கூடாகவும் பணத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் ஹரீன் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வசிப்போருக்கு வீடு வசதி மட்டுமன்றி மேலும் பல வசதிகளும் சலுகைகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணிக்கும் வரி விதிக்கப்படுவதாக உலா வரும் கதை முற்றிலும் தவறானது. நிதி அமைச்சு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பணத்தில் வரி அறவிடமாட்டதென உறுதியாக தெரிவித்துள்ளது. மக்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறான கதைகளை மக்கள் சோடனை செய்கிறார்களே தவிர இதில் உண்மை இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் இந்த அரசாங்கம் வெளிநாட்டுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதனைப் பெருமளவில் ஊக்குவிப்பதில்லையெனத் தெரிவித்த அமைச்சர் இந்த அரசாங்கத்தில் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார்.

மாறாக திறமையான நுட்பங்களுடன் கற்றுத் தேர்ந்த பெண்களைப் பல்வேறு துறை சார்ந்த தொழில்களுக்கு அனுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாடு செல்லும் பெண்களுக்கான குடும்ப பின்னணி அறிக்கையில் தெளிவு வேண்டுமென அமைச்சரவை உபகுழுவிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்