உலக சமாதானத்தின் சின்னம் ஐ.நா சபை




இரண்டாம் உலகப் போர் 1945இல் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை விமானம் மூலமாக வீசியது. இதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவை மனித குலம் என்றுமே மறக்க இயலாது.

அத்தகைய கொடூர யுத்தம் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் பெற்றது.

உலக மக்களின் சுபீட்சம், சிறுவர் பாதுகாப்பு, மனித உரிமை, சுகவாழ்வு, வறுமை ஒழிப்பு, இயற்கை அனர்த்த நிவாரணம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இயங்குகின்ற இச்சபை அலுவலகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமையப் பெற்றுள்ளது.

தற்சமயம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த அன்ரோனியோ கற்றஸ் உள்ளார். செயலாளர் நாயகத்தின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். செயலாளராக இருமுறை தெரிவு செய்யப்பட்ட பெருமை கானா நாட்டைச் சேர்ந்த கொபி அனான் என்பவரையே சாரும்.

1945 ம் ஆண்டு ஜூன் மாதம் 26 ம் திகதி 111 விதிகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சாசனம் அமெரிக்காவின் சன் பிரான்ஸிஸ்கோ நகரில் கைச்சாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1945 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் திகதி நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இச்சபையின் கொடியானது வெளிர் நீலப் பின்னணியில் வெண்மை நிறத்தில் ஐ.நா சபையின் சின்னமான ஒலிவ் இலைகளுடன் கூடிய உலகப் படத்துடன் வடிவமைக்கப்பட்டது.

ஐ.நா சபையின் பிரதான அமைப்புகள் வருமாறு:





செயலாளர் நாயகத்தின் பணிமனை, சர்வதேச நீதிமன்றம், தர்மஉதவிகள் சபை, பொதுச் சபை, பாதுகாப்பு சபை, பொருளாதாரச் சபை.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமையை 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி பெற்றுக் கொண்டது. ஐ.நா சபையின் கொடியில் காணப்படுகின்ற ஒலிவ் இலைகள் சமாதானத்தையே குறிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். இறுதியாக இணைந்து கொண்ட நாடு தென் சூடான் ஆகும். பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் ஐந்தாகும். அவையாவன அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா.

1995ம் ஆண்டு ஐ.நா சபை தனது பொன் விழாவைக் கொண்டாடியது.

உலக சமாதானத்தின் சின்னமாகத் திகழும் ஐக்கிய நாடுகள் சபை வருடந்தோறும் ஒக்டோபர் இருபத்து நான்காம் திகதி ஐ.நா தினத்தைக் கொண்டாடி வருகின்றது.