ஆங் சான் சூக்கியின் நோபல் விருதை தக்கவைக்க முடிவு


மியன்மாரின் ஒரு சிவில் தலைவியாக ஆங் சான் சூக்கி எடுத்த சில முடிவுகள் மன்னிக்க முடியாதது என்றபோது அவரது நோபல் பரிசு திரும்பப் பெறப்பட மாட்டாது என்று நோபல் அறக்கட்டளை தலைவர் லார்ஸ் ஹெய்கன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கருத்து வெளியிட்டிருக்கும் ஹெய்கன்ஸ்டன், நீதிபதிகளின் ஆய்வுகளுக்கு பின் வழங்கப்பட்ட விருதை தற்போதைய நிகழ்வுகளை கொண்டு திரும்பப் பெறுவது முடியாத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.





மியன்மாரில் அந்நாட்டு இராணுவம் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் இன அழிப்பு நோக்கம் கொண்டது என்று கடந்த ஓகஸ்டில் ஐ.நா வெளியிட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் காரணமாக 700,000க்கும் அதிகமான அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.

1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சூக்கி, தற்போது அந்நாட்டு அரசுக்கு தலைமை வகிக்கிறார். ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து சூக்கி மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.