பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒருபோதும் நிதி ஏற்பாடுகளைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நலன் பேணல் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.