மஹிந்த பிரதமராக பதவியேற்றமையால் தமிழ் மக்கள் பெரும் பீதியில்….. மாவை சேனாதிராஜா எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடும் போது;

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறைந்த குடும்ப ஆட்சி நடைபெறுவதால் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் விரும்பியிருந்தது.


அதற்கமைய பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆதரவை வழங்கி வெற்றி பெற வைத்தனர்.இதில், தமிழ் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதாவது தீர்மானிக்கும் சக்தியாக தமிழர் தரப்பு அக்காலகட்டத்தில் இருந்தமையால் நல்லாட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கு உதவியிருந்தது.

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றங்கள் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாருடனும் பேசாமல் ஜனாதிபதி தனித்தே இத்தகையதொரு முடிவை எடுத்திருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தவரையில் யார் பிரதமர் என்பதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கின்றது’ எனவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.