டிரம்ப்–கிம் மீண்டும் சந்திப்பு


வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு நடக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நவம்பர் மாதம் நடக்கவுள்ள இடைதேர்தலுக்கு பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் கிம் இடையிலான முதல் உச்சிமாநாடு கடந்த ஜுன் மாதம் நடந்தது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்க வட கொரியா ஒப்புக்கொண்டது.

எனினும் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்குவதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கிம்–டிரம்ப் சந்திப்பு குறித்து ஓர் அறிவிப்பு வந்துள்ளது.

“இம்முறை இரு தலைவர்களும் சந்திப்பதற்கு மூன்று நான்கு இடங்கள் பரிசீலனையில் உள்ளன. பெரும்பாலும் சிங்கப்பூரிலேயே அடுத்த சந்திப்பும் நடக்காது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.