குழந்தைகளை வேலைக்கமர்த்துவதை தடுப்பது சமூகத்தின் பொறுப்பு


பதினெட்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளே சிறுவர்களாவர்.இத்தகைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஒளிமயமான சிறுவர் உலகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியது சமுகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனதும் கடமையாகும். முழு உலகினது பெறுமதிமிக்க செல்வமே இந்த சிறுவர் சமுதாயமாகும்.

இன்றைய சமூக உளவியல் பிரச்சினைகளும், பல்வேறு கொடுமைகளும், போதைப்பொருள் பாவனைகளும் சிறுவர்கள் மீதான சகல விதமான துஷ்பிரயோகங்களுக்கும் காரணமாக அமைகின்றன. இவ்வாறான பிரச்சினைகளில் பிரதானமானதாக சிறுவர் வேலைக்கமர்த்தல் காணப்படுகின்றது.

சிறுவர் வேலைக்கமர்த்தலை இயலச் செய்கின்ற முக்கிய காரணிகளாக வறுமை, அறியாமை, பெற்றோர் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகவிருத்தல்,பெற்றோரின் சோம்பேறித்தனம், குடும்ப வன்முறை,பெற்றோர் பிள்ளைகளைப் புறக்ககணித்தல், கவர்ச்சியற்ற கல்விச் சூழல் என்பன உள்ளன.

சிறுவர் வேலைக்கமர்த்தல் என்பது எமது பிராந்தியத்திலுள்ள நாடுகளின் முக்கியமானதொரு சிறுவர் உரிமை மீறலாக காணப்படுகின்றது. இலங்கையில் சிறுவர் வேலைக்கமர்த்தல் என்பது அதிகமாக முறைசாரா தொழில்துறைகளிலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக 15_-17வயதுக்கிடைப்பட்டவர்களே வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் இச்சிறுவர்களில் 33.8 வீதமான சிறுவர்கள் விவசாயத்துறையிலும், 29.1வீதமானவர்கள் கைத்தொழில்துறையிலும், 37.2வீதமானவர்கள் சேவை நாடிகளாகவும் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்கள் பேரம்பேசும் சக்தியற்ற சிறுவர்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தொழில் தராதரங்களைப் புறக்கணித்து வேலைக்கமர்த்தி சுரண்டுவதுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அச்சிறுவர்களை உடல், உள ரீதியான சித்திரவதைக்கும் உள்ளாக்குகின்றனர். இவ்வாறான செயற்பாட்டினால் சிறுவர்களின் உடல்,உள, ஆளுமை வளர்ச்சி மற்றும் அறவொழுக்கம் என்பன பாதிப்படைகின்றன. இவ்வாறான பாதிப்புக்கள் அச்சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. இவ்வாறான சிறுவர் வேலைக்கமர்த்தல் என்பது சமுகத்திற்கெதிரான முக்கியமான ஒரு குற்றச்செயலாக விளங்கின்றது. சிறுவர்களை வேலைக்கமர்த்தலை இல்லாதொழிப்பதற்காக சர்வதேச சமவாயங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளதுடன், தேசிய சட்டங்கள் சிலவும் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயமானது ஐ.நா பொதுச்சபையால் 1989ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு 1990இல் நடைமுறைக்கு வந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டினை இலங்கை அரசும் கொண்டுள்ளது. இச்சமவாயம் சிறுவர் என்பது 18வயதுக்கு கீழ்பட்டவர்களாவர் என வரையறை செய்கின்றது. இதன் உறுப்புரை 32இன்படி பொருளாதார சுரண்டலிலிருந்தும், ஆபத்தான, கல்வியை பாதிக்கக் கூடிய வேலைகளிலிருந்தும் பாதுகாப்பைப் பெறும் உரிமை சிறுவர்களுக்குள்ளது. உறுப்புரை 34 ஆனது விபசாரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் என்பவைகளிலிருந்து பாதுகாப்பைப் பெறும் உரித்து சிறுவர்களுக்கு உள்ளது என்று கூறுகின்றது.





சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்ட முக்கிய சமவாயங்களில் சர்வேதச தொழிலாளர் தாபனத்தினால் வெளியிடப்பட்ட 1973ம் ஆண்டின் 138ம் இலக்க ஆகக்குறைந்த வயதுகள் பற்றிய சமவாயமும், 1999ம் ஆண்டின் 182ம் இலக்க சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயமும் முக்கியமானவையாகும். இலங்கை ஆகக்குறைந்த வயதுகள் பற்றிய சமவாயத்தினை 2000ம் ஆண்டிலும், சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயத்தினை 2001ம் ஆண்டிலும் ஏற்று அங்கீகரித்தது.

ஆகக்குறைந்த வயது பற்றிய சமவாயமானது கட்டாயக் கல்வியை பூர்த்தி செய்வதற்கான வயதைவிட குறைந்ததாக இருத்தலாகாது எனவும் எவ்வாறாயினும் 15வயதினைவிடக் குறைந்ததாக இருத்தலாகாது எனவும் விதிக்கின்றது. ஆயினும் பொருளாதார மற்றும் கல்வி வசதிகள் குறைவாக விருத்தியடைந்த நாடொன்று ஆரம்பத்தில் 14வயதினை ஆகக்குறைந்த வயதாக விதிக்கலாமென்கின்றது. வேலையின் தன்மை அல்லது சூழ்நிலைகளின் காரணமாக இளவயதினருடைய சுகாதாரம், பாதுகாப்பு அல்லது அறவொழுக்கத்தைப் பாதிக்கக் கூடிய எவ்வகை வேலைக்கும் அனுமதிப்பதற்கான ஆகக்குறைந்த வயது 18ஆகவிருத்தல் வேண்டும் என விதிக்கின்றது. சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயமானது சிறுவர் என்பது 18வயதுக்கு குறைந்த எல்லோரையும் உள்ளடக்குமென்கின்றது.

இச்சமவாயத்தின் நோக்கத்திற்காக சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் என்பது எல்லா வகையான அடிமை முறைமைகள், கட்டாய வேலையில் ஈடுபடுத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துவது, ஆபாச தயாரிப்புக்களுக்கு அல்லது ஆபாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவது, சட்டமுரணான செயல்களுக்கு குறிப்பாக போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்துவது பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு, மற்றும் ஒழுக்கம் என்பனவைகளுக்கு தீங்கான வேலைகளில் ஈடுபடுத்துவது என்பவைகளை உள்ளடக்குகின்றது.

சர்வதேச சமவாயங்களை உள்நாட்டில் நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கைப் பாராளுமன்றமும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பிலான சட்டங்களையும் இயற்றியுள்ளது. 1956ம் ஆண்டின் 47ம் இலக்க பெண்கள் இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை வேலைக்கமர்த்துதல் சட்டமானது பிள்ளைகள் மற்றும் இளம் வயதினரின் பாதுகாப்பை வலுப்படுத்தியதுடன், 2003ம் ஆண்டின் 8ம் இலக்க திருத்தச்சட்டத்தால் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டத்தில் பிள்ளைகள் என்பது 14வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் என்கின்றது.

மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுதல், மதுபான உற்பத்தி, மதுபான வகைகளை கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை, புகையிலை அறுவடை, புகையிலைப் ​ெபாருட்களின் உற்பத்தி கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல், ஆழமான நீர்ப்பரப்பில் மீன் பிடித்தல், சுரங்க வேலை, பயணிகள் போக்குவரத்து மற்றும் பாரமான பொருட்களின் காவுகை, உலோகங்களை உருக்குதலுடன் சம்பந்தப்பட்ட வேலை, ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வேலை, பாதுகாப்பற்ற சூழ்நிலையில்வேலைகள், கழிவகற்றல், தோல் பதனிடுதல், காடுகளில் மரம் வெட்டுதல், கனியவள அகழ்வு, மரங்களில் ஏறுதல், வெடிபொருட்களை உற்பத்தி செய்தல், மதுபானங்களை பரிமாறுதல், கல்லுடைத்தல், மண் அகழ்வு, உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுண்ணாம்பு உற்பத்தி வேலை, கட்டடங்களுக்கு வர்ணம் தீட்டுதல், ஓடு மற்றும் செங்கல் உற்பத்தி, உப்பு உற்பத்தி, இரவு 8.00மணிக்கு பின்னரும் காலை 6.00மணிக்கு முன்னரும் ஏதேனும் வேலை, கப்பல்களில் வேலைசெய்தல் முதலான வேலைகளை தடைசெய்கின்றது. மேலும் 18வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதனைத் தடுப்பதற்கு இலங்கை தண்டனைச் சட்டக்கோவையிலும் 1995 மற்றும் 1998ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தல், ஆபாச மற்றும் ஒழுக்கக் கேடான காட்சிகளில் ஈடுபடுத்தல் அல்லது அத்தகைய பிரசுரங்களுக்காகப் பயன்படுத்தல், பிச்சையெடுக்க வைத்தல், தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் ஆயுதப்போரில் ;ஈடுபடுத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி சமுகத்தில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டால் அவை பற்றிய முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, தொழிற் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் முதலான இடங்களில் முறைப்பாடு செய்யலாம்.

ஏ.எல். றியாஸ்