Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அடுத்து வரவிருக்கும் தேர்தல் இருமுனையா, மும்முனையா?
வரவு செலவுத் திட்டத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு பிரதான பிரிவுகளையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் அது தொடர்பான ஆரம்பப் பேச்சுவார்த்தைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் எந்தவொரு தீர்மானத்தையும் ஈட்ட முடியாமல் போனது தனிக்கதை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இப்பேச்சுவார்த்தையின் போது பேரம் பேசும் தரப்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேரம் கேட்கும் தரப்பாகவும் செல்வதில் சிக்கல் நிலைமை தோன்றியிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்திருந்த எதிர்பாராத வெற்றி அதனை தற்போது பேரம் பேசும் தரப்பாக மாற்றியுள்ளது.

அத்தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாவது இடத்தையே பெற முடிந்தது. இதனால் பேரம் பேசும் தகுதியை அக்கட்சி இழந்து விட்டது. இந்நிலையில் நல்லாட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் இரு தரப்பினரும் ஒன்றிணைவது பற்றிப் பேச முடியுமென ராஜபக்ஷ தரப்பு கூறி வருகிறது.

ஆனால் அவ்வாறு செய்வது 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனக்குக் கிடைத்த மக்கள் ஆணைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்வதாக அமையும். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவித செயற்பாட்டில் இறங்கப் போகிறார் என்று நிச்சயித்துக் கூற முடியாதுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிரமமாக காய் நகர்த்தி வருகிறது. தேவைப்படின் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷவே வகிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது. பொதுத் தேர்தலில் வேண்டுமானால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேரக் கூரும்.

பொலிஸ் மா அதிபரின் ராஜினாமா:

பொலிஸ் மாஅதிபரின் பதவி தொடர்பான சர்ச்சையே இப்போது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடந்து கொள்வதாக கூட்டு எதிரணியில் உள்ள கட்சிகள் கூறுகின்றன. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதி முயற்சி வெளிவந்தது முதல் பொலிஸ் மாஅதிபர் நடந்து கொண்ட விதம் அவர் அப்பதவிக்கு ஏற்றவரல்ல என்பதை காட்டுவதாக மற்றையோர் கூறுகின்றனர்.

ஆனால் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இன்றி பொலிஸ் மா அதிபரை அவரது பதவியில் இருந்து ஜனாதிபதி விலக்க முடியாது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலமான அங்கீகாரம் பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்க தேவைப்படுகிறது.

பொலிஸ் மாஅதிபர் பதவியை தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்று பூஜித ஜயசுந்தர முன்னர் கூறி வந்தார். ஆளுநர் இப்போதுதான் ராஜினாமா செய்யும் விருப்பத்துடன் இருப்பதாக கூறுகிறார்.

அனைவரினதும் விருப்பம் தனது ராஜினாமாவாக இருக்குமானால் தான் ராஜினாமா செய்வதே நல்லது என்று பொலிஸ் மாஅதிபர் ஊடகவியலாளர்களிலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"தேவையான அளவு நான் வேலை செய்து விட்டேன் என்று நினைக்கிறேன். கடந்த 33 வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தில் வேலை செய்து வருகிறேன். எவரிடமும் இருந்து ஒரு சதத்தையேனும் நான் இலஞ்சமாக வாங்கியதில்லை. எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டுள்ளதுடன் மக்களின் நன்மதிப்பையே நான் சம்பாதித்துள்ளேன். எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்று நான் கொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. எனது குடும்பம் வசிப்பதற்கு இனி நான் வாடகைக்கு ஒரு வீட்டைத் தேட வேண்டும்” என்று கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது பொலிஸ் மாஅதிபர் கூறியிருந்தார்.

ஜனாதிபதியோ பிரதமரோ என்னை ராஜினாமா செய்யுமாறு இதுவரை கேட்கவில்லை.

எனினும் பதவியை ராஜினாமா செய்வதை விரும்புகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.என் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தால் நான் தொடர்ந்தும் எனது பதவியில் இருப்பதில் எந்தப் பயனுமில்லை” என்று பொலிஸ் மாஅதிபர் கூறுகிறார்.

பொலிஸ் மாஅதிபரின் கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார “பொலிஸ் மாஅதிபருக்கு அவரது பதவியை ராஜினாமா செய்யும் உரிமை உண்டு.

ஆனால் அவ்வாறு பதவியில் இருந்து விலகப் போவதாக அவர் எமக்கோ அல்லது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கோ இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

பதவியை ராஜினாமா செய்யுமாறு இதுவரை நாம் அவருக்குக் கூறவில்லை. ஆனால் அவர் விரும்பினால் அவ்வாறு ராஜினாமா செய்யும் உரிமை அவருக்கு உண்டு” என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசு இவ்வாறான பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 2020ம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும் இறங்கியுள்ளன.

எனினும் தற்போதைய பொருளாதார நிலை ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இருந்து வருகிறது.

முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிய பாரிய கடன் சுமை காரணமாகவே நாடு இப்போதைய மோசமான நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. ஆனால் மக்கள் இதனை ஒரு நொண்டிச் சாட்டாகவே கருதுகின்றனர்.

அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்கப் போகிறது. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்று பல தேர்தல்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதில் எது முதலில் வரும் எது பின்னால் வரும் என்று நிச்சயித்துக் கூற முடியாது. ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக இவை வரத்தான் போகின்றன.

இத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றே தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேரும் வாய்ப்புகள் குறைவு.

அதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுமா என்பதை நிச்சயித்துக் கூற முடியாது.

அடுத்த வரும் தேர்தல்கள் இருமுனைத் தேர்தலா இல்லை மும்முனைத் தேர்தலா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.