தேசிய கீதத்திற்கு எழாவிட்டால் மொன்டினிக்ரோவில் கடும் அபராதம்


மொன்டினிக்ரோவில் அந்நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்திருக்காதவர்ளுக்கு 2,000 யூரோ வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு முன்வைத்துள்ளது.

தேசிய தினம் மற்றும் தேசிய அடையாளங்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்திருக்கும் நிர்வாகம், இது தொடர்பில் 300 தொடக்கம் 2000 யூரோ வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் செர்பியாவில் இருந்து விடுதலை பெற்ற சிறிய பால்கன் நாடான மொன்டினிக்ரோவின் தேசிய கீதம் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் செர்பிய ஆதரவு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த தேசிய கீதத்தை நிராகரித்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் தேசிய கீதம் ஒலிக்கும்போது இவர்கள் எழுந்து நிற்க மறுத்து வருகின்றனர்.

முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டத்தில் அரச நிறுவனங்களில் தேசியக் கொடி நிரந்தரமாக பறக்கவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.