சவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்


காணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் சவூதி அரேபியாவுக்கு சவால் விடுத்துள்ளார்.


சவூதி நாட்டவரான ஜமால் கசோகி அந்த துணைத் தூதரக கட்டடத்திற்குள் செல்லும்போதே கடைசியாக காணப்பட்டார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த திங்கட்கிழமை கவலை வெளியிட்டிருந்தார்.


இந்த தூதரக சுவர்களுக்குள்ளேயே கசோகி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட துருக்கி நிர்வாகம் அந்த துணைத் தூதரகத்தை சோதனையிட கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த கூற்றுகளை சவூதி அரேபியா நிராகரித்து வருகிறது.


“அவர் அந்த கட்டடத்தில் இருந்து வெளியேறியதாக கூறி துணைத் தூதரக அதிகாரிகளால் தப்பிக்க முடியாது” என்று எர்துவான் திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். “அவர் வெளியேறி இருந்தால் வீடியோ காட்சிகள் மூலம் அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்” என்று அவர் சவால் விடுத்தார்.


அவர் கொல்லப்பட்டதற்கான உறுதியான ஆதராங்கள் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டிருந்தனர். கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த 15 சவூதியர்கள் இதனை செய்திருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


அந்த தூதரகத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் வந்து சோதனையிடும்படியும் சவூதி முடிக்குரிய இளவரசர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.


அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கசோகி வொஷ்டன் போஸ் பத்திரிகைக்கு எழுதி வருகிறார். இது தொடர்பில் அமெரிக்கா சவூதியிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.


அவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, வழக்கமாக பத்தி எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு வெற்றிடம் விட்டது வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை.


சவூதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து எழுதி வந்த அவரை ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.


தனது முன்னாள் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை உறுதி செய்யும் ஆவணத்தை பெறவே ஜமால் கசோகி கடந்த வாரம் ஸ்தன்பூலில் உள்ள துணைத் தூதரகத்திற்கு சென்றார். தான் திரும்பி வராவிட்டால் ஜனாதிபதி எர்துவானில் ஆலோசகரை அறிவுறுத்தும்படி அவர் தான் திருமணம் முடிக்க விருந்த துருக்கி நாட்டு பெண்ணான ஹதிக் கன்கிஸிடம் குறிப்பிட்டுள்ளார்.