Breaking

Friday, October 5, 2018

கூவத்தூர் இரகசிய ஆதாரங்கள்; தமிழ்நாடு அரசுக்கு ஆபத்து!
புலித்தேவன் பிறந்தநாளில் தாக்குதல் நடத்தியதாக மேலும் ஒரு வழக்கு கருணாஸுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக அ.தி.மு.க அரசு செயற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருணாஸ் கடந்த மாதம் முக்குலத்தோர் புலிகள் படை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் பொலிஸ் அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது வழக்குக்காக நெல்லையில் இருந்து ெபாலிஸார் நேற்று சென்னையில் உள்ள கருணாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால் திரும்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூவத்தூர் விவகாரத்தில் அரசை மிரட்டுவதாலேயே அவர் மீது வழக்குகள் போடப்படுவதாக தெரிகிறது.கருணாஸ் கடந்த மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது "இந்த கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து விட்டதா?"என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் "கூவத்தூரில் நடந்தது என்ன என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன்" என்றும் கருணாஸ் அ.தி.மு.க அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.

கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் வழங்கப்பட்டதாக நாளிதழ் ஒன்று தெரிவித்திருந்தது. எனவே இது தொடர்பான ஏதேனும் ஆதாரங்களை கருணாஸ் வைத்துள்ளாரா என்று தெரியவில்லை.

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக் காத்திருந்தாலும் அதன் முக்கிய முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்திருந்தனர். எனவே அ.தி.மு.கவை எப்படியாயினும் கைப்பற்ற நினைக்கும் டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கருணாஸை சந்தித்ததும் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தினகரன், கருணாஸுடன் இணைந்து அரசியல் செய்வதை தங்களுக்கு எதிராகவே அ.தி.மு.க அரசு கருதுகிறது. இதனால் தினகரனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகளை கூட்டிக் கொண்டே அவருக்கு குடைச்சலை கொடுப்பதுதான் அ.தி.மு.க வகுத்துள்ள அதிரடித் திட்டம் என்று கூறப்படுகிறது.

மேலும் அவரது எம்.எல்.ஏ பதவியை எப்படியாவது பறிக்கும் திட்டத்தையும் அரசு வகுத்துள்ளது.

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எனவே அவரை நீக்க வேண்டும் என பேரவை செயலாளர் சீனிவாசனுக்கு எம்.எல்.ஏ கருணாஸ் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் கைது செய்யப்பட்டபோது "சபாநாயகரிடம் அனுமதி பெற்றீரா" என பொலிஸாரிடம் கருணாஸ் கேட்டது குறிப்பிடத்தக்கது.

கருணாஸுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளதால் உடல்நிலை சரியில்லை என்றாலும் 24 மணிநேரத்துக்குள் அவர் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையேல் அவருக்கு வழங்கப்பட்ட பிணை ரத்தாகி விடும். இந்த நிலையில் கருணாஸ் தரப்பு வழக்கறிஞர் நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கருணாஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவச் சான்றுகளை ஒப்படைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட பொலிஸார் தீவிரம் காட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுஇவ்விதமிருக்க, "முதல்வர் மற்றும்பொலிஸ் துறை குறித்து அவதூறாகப் பேசியது மட்டும் கருணாஸ் கைதுக்கு காரணமல்ல. இது வெறும் சாக்குதான். இதற்குப் பின்னால் பெரும் காரணம் ஒன்று உள்ளது.” என்கின்றனர் கருணாஸ் தரப்பினர்.

முதலமைச்சரை அவதூறாகப் பேசினார், அதனால் கைது செய்யப்பட்டார் என்பதை விட அவர், `கூவத்தூர் ரகசியங்கள் அடங்கிய வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’ என்று கூறியது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறி விட்டது.

இதை இப்படியே விட்டால், நமக்கு ஆபத்து வந்து விடும், கருணாஸை கைது செய்து அந்த வீடியோ ஆதாரங்கள் குறித்து கேளுங்கள் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

'கருணாஸின் இந்தத் திடீர் பேச்சுக்குப் பின்னால் டி.டி.வி. தினகரன் தரப்பு இருக்கலாம். நம்மை மிரட்ட, கருணாஸை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார். உடனே இதற்கு முடிவுகட்ட வேண்டும்’ என்று கட்சியினர் அழுத்தம் தரப்பட்டது. இதையடுத்து அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது” என்கின்றனர் கருணாஸ் தரப்பினர்.

இதனால், அதிருப்தியடைந்துள்ள கருணாஸ் தரப்பு,"முதலமைச்சர் எங்களை சீண்டிப் பார்க்கிறார். அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் புட்டுப் புட்டு வைத்து விடுவோம். நீதிமன்றக் காவலில் எடுத்து, ஆதாரங்களைத் தரச் சொல்லி கொடுமை செய்ய பொலிஸ் துறை திட்டமிட்டது. நல்ல வேளையாக நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. அண்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்" என்று ஆவேசமடைந்துள்ளனர் கருணாஸ் தரப்பினர்.