பொலிவியாவுடன் கடல் பிரச்சினை: சிலிக்கு அதரவாக ஐ.நா தீர்ப்பு




பசிபிக் கடலை பயன்படுத்துவது குறித்து அண்டை நாடான சிலியுடனான 19 ஆம் நுற்றாண்டு பழமை வாய்ந்த பிரச்சினை ஒன்றில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பொலிவியாவுக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது.

1884 ஆம் ஆண்டு சிலியுடனான யுத்தத்திற்கு பின்னர் கடல் வழியை இழந்த நிலத்தால் சூழப்பட்ட பொலிவியா நாடு அன்று தொடக்கம் அதனை மீளப்பெறுவதற்கு முயற்சித்து வருகிறது.

எனினும் பொலிவியாவுக்கு கடலை அணுகுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கடப்பாடு சிலிக்கு இல்லை என்று சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் நீடித்த விசாரணைக்கு பின்னர் அளிக்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த இறுதித் தீர்ப்புக்கு மாறாகா பொலிவிய ஜனாதிபதி எவோ மொராலஸ், “பொலிவியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.





எனினும் பொலிவியா அல்லது சிலி சர்ச்சைக்குரிய கடற்கரை பகுதியை பயன்படுத்துவதற்கான உரிமை பற்றி ஐ.நா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பில் பொலிவியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கடப்பாடு சிலி நாட்டுக்கு இல்லை என்று மாத்திரமே அந்த தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு பொலிவிய ஜனாதிபதி மொராலஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்தில் இருக்கும் மொராலஸ் 2019 ஆம் ஆண்டில் மற்றொரு தவணைக்கு போட்டியிட எதிர்பார்த்துள்ளார். பசிபிக் கடலை அணுகும் விவகாரம் பொலிவியாவில் உணர்வுபூர்வமான ஒன்றாக உள்ளது.

கடல் மார்க்கம் ஒன்று இல்லாத நிலையிலும் பொலிவியா சிறு அளவான கடற்படை ஒன்றை வைத்திருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் கடல் தினத்தை கொண்டாடி வருகிறது.

1879–1884 யுத்தத்தின்போது பொலிவியா 400 கிலோமீற்றர் கடற்கரை பகுதியை சிலியிடம் இழந்தது.