இலங்கைக்கு அபாய எச்சரிக்கை; நாட்டை நோக்கி நகரும் மோசமான ஆபத்து; பதற்றத்தில் மக்கள்


இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றையதினம் நாட்டு மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

இதன்படி இலங்கையின் பல பிரதேசங்களில் இடி மின்னலுடனான மிகப் பலத்த மழை பெய்யவிருப்பதுடன் கடும் காற்றும் கடல் அலை உயர்வும் ஏற்படும் என எச்சரித்துள்ளது.

அரபிக் கடலில் ஏற்பட தாழமுக்கமானது வலுவடைந்துவரும் சூழ்நிலையில் இது இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பிலிருந்து 1650கிலோ மீட்டர்கள் தூரத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்க மையம் பலத்த சுறாவளியாக மாற்றமடைவதாகவும் இதனால் அதன் மையத்திலிருந்து சுமார் 200கிலோமீட்டர்கள்வரை பலத்த இடியுடன்கூடிய மழை பொழியுமெனவும் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் 150மில்லிமீட்டர்களுக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் தென் மாகாணங்களில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற கால நிலையின் காரணமாக எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பலர் பலியாகியுள்ளனர்.

70-80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களும் கடற்படையினரும் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் மேலும் வலியுறுத்துகின்றது.