ருமேனிய ஒருபால் திருமண எதிர்ப்பு வாக்கெடுப்பு தோல்வி


ஒருபால் திருமணத்திற்கு அரசியலமைப்பில் தடை விதிப்பது தொடர்பில் ருமேனியாவில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐந்தில் ஒரு வாக்காளர்கள் மாத்திரமே பங்கேற்ற நிலையில் அது தோல்வி அடைந்துள்ளது.

திருமணம் என்பது ஆண் மற்றும் பெண்களுக்கு இடையிலானது என அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்று கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வாக்கெடுப்பில் கேட்கப்பட்டது.

எனினும் இந்த தேர்தலில் 20.4 வீதமான வாக்காளர்களே தமது வாக்கை பாதிவு செய்துள்ளனர். வாக்கெடுப்பை அங்கீகரிக்க 50 வீத வாக்குப் பதிவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் வாக்களித்தவர்களின் 90 வீதமானவர்கள் அரசியலமைப்பில் இவ்வாறு மாற்றம் கொண்டுவர ஆதரவு அளித்திருந்தனர்.

ருமேனியாவில் ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்ற நிலையில் இந்த வாக்கெடுப்பு அங்கு எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கற்பனையான ஒன்றுக்காக வாக்கெடுப்பு நடத்தி 40 மில்லியன் யூரோக்களை வீணாக்கிய அரசு உடன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.