Monday, October 1, 2018

Facebook அரசியலும், பிராந்திய அரசியலும்.



\


இன்றைய எனது பதிவு சமூகவளைத்தள அரசியல் மற்றும் அதன் பிரதிபலிப்பாக உள்ள சமூக அரசியல் சார்ந்ததாகும்.


இவ்வாரம் அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட facebook சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஓர் விடயமே, “அக்குரஸ்ஸ, கொடபிடியவில் மூடப்பட்டுள்ள இறைச்சிக்கடையை மீண்டும் திறப்பதற்கு ஏலம் விடப்படும். அதுரலிய பிரதேச சபையின் கவனத்திற்கு, முஸ்லிம் வியாபாரிகளுக்கு இறைச்சிக்கடையை வழங்கிவிட்டு, வாக்கு கேட்டு வரவேண்டாம். இதற்கு எதிராக அக்குரஸ்ஸ பொதுமக்கள் அணிதிரள்வார்கள்.”

இந்தப் பதிவை இட்டது சாதாரண ஓர் பொது இளைஞன் அல்ல. இதே பிரதேசத்தை பிரதிநிதிப்படுத்தி தேர்தலில் களமிறங்கி தற்போது தென்மாகாண சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் (பொடிக்கடே பிரியந்த) ஒருவரின் மகனாவார்.

இப்பதிவை இட்ட இதேவாரத்தில் அதுரலிய பிரதேச சபை அபிவிருத்தி சங்க கூட்டம் 2018/09/28 அன்று அதுரலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

வணிக கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன மற்றும் தென்மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் சிறிசேன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அதுரலிய பிரதேச சபை தலைவர் நிஹால் டி சில்வா உட்பட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்திலும் 2019ம் ஆண்டுக்காக இறைச்சிக்கடை (டெண்டர்) ஏலம் விடுதல் சம்பந்தமாக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதில் பிரதேச அபிவிருத்தி சங்க தலைவர்கள் இருவரும் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

விசேடமாக பிரதியமைச்சர் புத்திக பத்திரன அவர்கள் தம் கட்சி சார்ந்த உறுப்பினர்களிடம் இதற்கு ஆதவளிக்க வேண்டாம் என்றும் எதிராக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் மாடுகளை அறுத்தல் சம்பந்தமாக புதிய சட்டம் ஒன்றையும் முன்வைத்தார்.

அதாவது மதம் சார்ந்த மற்றும் திருமணங்களுக்காக மாடு அறுக்கும்போது அதற்காக கிராம சேவகரின் அனுமதி பெறவேண்டும் என்ற புதிய தீர்மானமொன்றை முன்வைத்தார்.

குறிப்பாக கொடபிடிய வட்டராத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ள facebook பதிவு மற்றும் இறைச்சிக்கடை, மாடு அறுத்தல் தீர்மானங்கள் பற்றி கொடபிடிய வட்டாரத்தை பிரதிநிதிப்படுத்துகின்ற அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பாலிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

“நான் facebook அரசியல்வாதியல்ல எனவே facebook பதிவு பற்றி எக்கருத்தையும் கூற முடியாது.” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 2019 ம் ஆண்டுக்காக இறைச்சிக்கடை டென்டர் விடாவிட்டால் அரசாங்கத்திற்கு சுமார் 30 இலட்சம் நஷ்டமேற்படுகின்றதாகவும் மதம் சார்ந்த மற்றும் திருமண விருந்துகளுக்காக மாடு அறுத்தல் சம்பந்தமாக ஏற்கனவே உள்ள சட்டத்தை ஆதரவு அளிப்பதாகவும் புதிய தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் அதற்கு எதிராக அச்சந்தர்ப்பத்தில் கருத்துக்களை முன்வைதீர்களா? என வினவியபோது, மேற்குறித்த தீர்மானங்கள் நான் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தபோது எடுத்தாக குறிப்பிட்டார். மேலும் இத்தீர்மானங்களுக்கு கவலை தெரிவித்ததுடன் பிரதியமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக பிரதேச புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து சிறந்த முடிவை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதேசத்தில் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற கட்சி உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைத்தளம் மற்றும் சமூக அரசியலில் ஈடுபடுவது கவலையான விடயமாகும்.

என்றாலும் இதே கட்சியை சேர்ந்த ஹொரகொட மற்றும் கொடபிடிய முஸ்லிம் இளைஞர்களின் நன்மதிப்பை பெற்ற மாகாண சபை உறுப்பினர் கபில கமகே அவர்களின் அணுசரணையில் கிரிக்கட் சுற்றுப் போட்டியும் கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய மைதானத்தில் இவ்வாரம் 25.09.2018 அன்று இடம்பெற்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
- இப்னு அசாத் -